2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்! 2438 பரீட்சை மத்திய நிலையங்கள்

#exam
Prathees
2 years ago
2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்! 2438 பரீட்சை மத்திய நிலையங்கள்

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (07) ஆரம்பமாகவுள்ளது.

கடந்தாண்டு ஒகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கொரோனாத் தொற்று  காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில்,இந்தப் பரீட்சை இன்று தொடக்கம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,438 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

2021 க்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொரோனா தொற்றுடைய பரீட்சார்த்திகளுக்காக வைத்தியசாலைகளில் 29 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

பாடசாலை மற்றும் தனிப்பட்ட ரீதியில் 3 இலட்சத்து 45 ஆயிரத்து 242 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

மேலும், 316 இணைப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்காக இரண்டு விசேட அறைகள் வீதம் ஒவ்வொரு பரீட்சை மத்திய நிலையத்திலும் அமைக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை,  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக 29 வைத்தியசாலைகளில்  பரீட்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்தகைய வைத்தியசாலைகளின் பட்டியல் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தனிமைப்படுத்தலில் இருக்கும் பரீட்சார்த்திகள் தங்களுடைய அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை நிலையத்துக்குச் சென்று தனிமைப்படுத்தலில் இருப்பதை சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும்.

பின்னர் சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களின்படி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட தேர்வு மையத்தில் பரீட்சை எழுத வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அல்லது தற்போது தனிமைப்படுத்தலில் உள்ள விண்ணப்பதாரர்கள் மேலதிக தகவல்களை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியிடமிருந்து அல்லது 1911 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை மையங்கள் எதுவாக இருந்தாலும் பரீட்சை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன வலியுறுத்தியுள்ளார்.