பீரிஸின் புது டெல்லிக்கான விஜயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன்

Prathees
2 years ago
பீரிஸின் புது டெல்லிக்கான விஜயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன்

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் தற்போதைய இந்திய விஜயம் தொடர்பாக தமிழ் மக்கள் கட்சியின் செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர் ஊ.ஏ.விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளார். 

புது டெல்லிக்கான விஜயம் இந்தியாவை ஏமாற்றுவதற்கான மற்றொரு நகர்வாகவே உள்ளதாக 
அவர் தெரிவித்துள்ளார்.

 Times Of India-விற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்குவது உட்பட, இந்தியாவிற்கு கடந்த காலங்களில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் C.V. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திரா காந்திக்கு பின்னர் இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தோல்வியை சந்தித்துள்ளதாகவும், அதன் விளைவாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்திய பிரதமர் மீது தாம் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தமிழ் மக்களுடைய சட்டரீதியான உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களுடைய தொடர்ச்சியான இருப்பை உறுதிப்படுத்தவும் நரேந்திர மோடி துணிச்சலாக செயற்படுவார் என இலங்கை தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதாகவும் .விக்னேஸ்வரன் தெரிவித்ததாக  அப்பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.