தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு.

Keerthi
2 years ago
தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு.

கொழும்பு துறைமுகத்தில் சுங்கத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ   அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சுங்கப் பிரிவினரின் கட்டுப்பாட்டிலுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பது தொடர்பான இந்த விசேட கலந்துரையாடல் நேற்றையதினம் (07) அரச தலைவர் செயலகத்தில் இடம்பெற்றது.இதன்போதே அவர் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் குழுவொன்றையும் அரச தலைவர் இதன்போது நியமித்தார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி கொள்வனவு செய்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்திய அரச தலைவர், அதற்கான திட்டங்களை இப்போதிருந்தே மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், தீங்கிழைக்கும் நோக்கத்துடன் பொருட்களை அதிகமாக இறக்குமதி செய்து இருப்பு வைப்பதை அனுமதிக்கக் கூடாது என்றும் அரச தலைவர் வலியுறுத்தினார்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை சந்தைக்கு விரைவுபடுத்துவதற்கான புதிய பொறிமுறையை அவர் அறிவுறுத்தியதுடன், இந்த விடயத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் புதிய குழுவுக்கு பணிப்புரை விடுத்தார்.

இவ்வறிவிப்பால் மக்கள் சந்தோஷமடைந்துள்ளதாக லங்கா4 செய்தியாளர் தெரிவித்தார். lanka4.com