வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இந்திய விஜயம் வெற்றிகரமாக நிறைவு!

Mayoorikka
2 years ago
வெளிவிவகார அமைச்சர்   ஜி.எல். பீரிஸின்  இந்திய விஜயம் வெற்றிகரமாக நிறைவு!

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்தியாவிற்கு மேற்கொண்ட 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டு அமைச்சராக பதவியேற்றதன் பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கரின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அமைச்சர் தனது முதலாவது விஜயத்தை புது தில்லிக்கு மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஆகியோரை சந்தித்தார். 

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவும் வெளிநாட்டு அமைச்சரை சந்தித்தார்.

இரு அமைச்சர்களுக்குமிடையிலான சந்திப்பும், அதனைத் தொடர்ந்து பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் பெப்ரவரி 7ஆம் திகதி புதுதில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. 

இந்த சந்திப்பின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சரின் அழைப்பிற்காகவும், தனக்கும் தனது தூதுக்குழுவினருக்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காகவும் அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பரிவர்த்தனை உறவில் இருந்து மூலோபாய பங்காளித்துவமாக பரிணமித்துள்ளமையை சுட்டிக்காட்டிய வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இலங்கை எப்பொழுதும் நம்பியிருக்கக்கூடிய உண்மையான நண்பன் இந்தியாவாகும் என்பதை இலங்கை மக்கள் அதிகளவில் அங்கீகரித்திருப்பதாகத் தெரிவித்தார். 

இந்த நிலையில், தற்போதைய நெருக்கடியான தருணத்தில் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை அமைச்சர் பீரிஸ் பாராட்டினார். 
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு எப்போதும் இலங்கைக்கு ஆதரவானதாக இருக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.

பொருளாதார ஒத்துழைப்பு, வலு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு, இணைப்பு, மக்களுக்கிடையிலான தொடர்பு போன்றவை உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டது. 

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட திருகோணமலை எண்ணெய்த் தாங்கி பண்ணை ஒப்பந்தம் குறித்தும் விசேட கவனம் செலுத்திய வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பை எடுத்துக் காட்டுவதாகவும், அதனால் இரு நாடுகளுக்கும் வெற்றிகரமான சூழ்நிலையில் கணிசமான நன்மைகளை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். 

குறிப்பாக காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளிலான ஒத்துழைப்பிற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்திய இக்கலந்துரையாடலில், மருந்துகள், உணவு பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தி போன்ற முன்னுரிமைத் துறைகளில் இந்திய முதலீடுகளுக்கான சாத்தியக்கூறுகளை மையப்படுத்தி அமைச்சர் பீரிஸ் இந்திய முதலீடுகளுக்கு அழைப்பு விடுத்தார். 

இலங்கையில் சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறச் செய்வதற்காக அபிவிருத்தியடைந்து வரும் இந்திய வெளிப்புற சுற்றுலாவை பயன்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.