விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை கருத்தில் கொண்டு நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்!

Reha
2 years ago
விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை கருத்தில் கொண்டு நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்!

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை கருத்தில் கொண்டு இலங்கையில் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘விலங்குகள் நலம்’ என்ற தலைப்பில் வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக இது குறித்து வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானியில் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“புதிய சட்டத்தின்படி, விலங்குகளை அடிப்பது, உதைப்பது, அதிக சுமை, அதிக வேலை, அதிக இனப்பெருக்கம், சித்திரவதை மற்றும் பயமுறுத்துவது ஆகியவை தடைசெய்யப்படும்.

விலங்குகள் எந்த வேலையிலும் அல்லது உழைப்பிலும் தகுதியற்றதாக இருந்தால் அவற்றைப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படவில்லை. ஒரு விலங்கின் ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் கேடு விளைவிக்கும் வகையில் பயிற்சி அளிப்பது, விலங்குகளுக்கு விஷம், தீங்கு விளைவிக்கும் மருந்து அல்லது பொருளை வழங்குவது போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களாகும்.

சட்டம் இயற்றப்பட்டதும், உயரம், நீளம் மற்றும் அகலம் ஆகியவற்றைப் போதுமான அளவு இல்லாத எந்தக் கூண்டு அல்லது இடத்திலும் விலங்குகளை அடைக்கவோ அல்லது அடைத்து வைக்கவோ முடியாது. விலங்கின் பொறுப்பாளர் வேண்டுமென்றே உணவைப் பறிப்பதும் குற்றமாகும்.

சட்டமூலத்தின் விதிகளுக்கு முரணாகச் செயல்படும் எந்தவொரு நபரும், நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 70,000 ரூபாய் அல்லது இரண்டு வருடங்களுக்கு குறையாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

எந்தவொரு மிருகத்தையும் கொடூரமான முறையில் கொன்றதற்காக குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபருக்கும் 125,000 ரூபாவிற்கு மிகாமல் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.