சாணக்கியனின் சாணக்கியம் - இனத்துக்காக போராடியவர்களை நிம்மதியாக உறங்கவிடுங்கள் - (வீடியோ)

Nila
2 years ago
சாணக்கியனின் சாணக்கியம் - இனத்துக்காக போராடியவர்களை நிம்மதியாக உறங்கவிடுங்கள் - (வீடியோ)

சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பாராளுமன்றில் குரல் கொடுத்த சாணக்கியன். ஒரு சாணக்கியந்தானாம்.
இனத்துக்காக போராடிய தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் நிம்மதியாகவாவது உறங்க விடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக மேலும் உரையாற்றிய அவர்,

“இன்று கொலை செய்து, பாலியல் பலாத்காரம் செய்து, களவெடுத்த குற்றத்தில் சிறைத்தண்டனை பெறும் கைதிகளுக்காக சபையில், இன்று பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தன்னுடைய இனத்தின் அரசியல் உரிமைக்காகப் போராடி, 20 – 30 வருடங்களாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும்.

சிறைச்சாலைக்குள் சவர்க்காரம் மற்றும் நீர் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இரவில் உறங்கக்கூட முடியாத நிலைமைக் காணப்படுகிறது. இதுதொடர்பாக நீதி அமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? நாம் அவர்களுக்கு சவர்க்காரம் வேண்டும், நீர் வேண்டும் என்று கூறவில்லை. மாறாக அவர்களை நிம்மதியாக உறங்கவேனும் விட வேண்டும் என்று தான் கோருகிறோம்.

அவர்களின் வழக்குகளைத் தான் விரைவில் முடிக்க முடியாதுள்ளது. குறைந்தது இந்த நடவடிக்கையையேனும் செய்ய வேண்டும் என்று தான் அரசாங்கத்திடம் கேட்கிறோம். அதேநேரம், பதுளை சிறைச்சாலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய கைதிகளும் தாக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பாக நீதி அமைச்சர் எடுத்த நடவடிக்கை என்ன?

நிம்மதியாக சிறையிலேனும் அவர்களை இருக்க விட வேண்டும். மேலும், முகநூலில் கருத்துக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்ட குற்றத்திற்காக பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பிணை வழங்க ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? ஒருசிலருக்கு அரசாங்கம் பிணை வழங்கியிருக்கலாம். இவை ஐ.நா. மனித உரிமை பேரவையை ஏமாற்ற செய்த செயற்பாடுகளாகும்.

எனவே, அநுராதபுரம் மற்றும் பதுளை சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளுக்கு நடந்த தாக்குதலுக்கான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும். அவர்களை நிம்மதியாக சிறைகளில் உறங்கவேனும் அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்” – எனத் தெரிவித்தார்.

சாணக்கியனின் குரல் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிப்பதும் அவரது ஆவேசப் பேச்சுக்கள் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு  உத்வேகத்தைக் கொடுப்பதகுறிப்பிடத்தக்கது.