பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் காய்ச்சல்:லஸ்ஸா காய்ச்சல்

Keerthi
2 years ago
பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் காய்ச்சல்:லஸ்ஸா காய்ச்சல்

லஸ்ஸா காய்ச்சல் (Lassa Fever) என்ற புதிய வகை வைரஸ் காய்ச்சல் மூன்று பேருக்கு தொற்றியமை பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய எபோலா வைரஸூம் லஸ்ஸா வைரஸூம் உறவு முறை தொடர்புடையவை என்பதால், இந்த தொற்றும் உயிரிழப்பும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளன.

இந்த பச்சிளம் குழந்தை, Luton & Dunstable மருத்துவமனையில் கடந்த வாரம் உயிரிழந்தது. இந்த நோய் தொற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரில் இந்த குழந்தையும் ஒன்று.

இதில் இரண்டு பேர் Cambridge Addenbrookes மருத்துவமனையில் முதலில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து லண்டன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டவர்கள். இந்த இரண்டு மருத்துவமனைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இந்த நோயாளிகளின் தொடர்பில் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், பிரிட்டன் தேசிய சுகாதார சேவையின் கிழக்கு இங்கிலாந்து பிரிவு இதனை ‘பெரிய வட்டார சம்பவம்’ என்று அறிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முகமையான ‘உக்சா’ (UKHSA) லஸ்ஸா காய்ச்சல் மரணம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், தொடர்புத் தேடல் நடவடிக்கைகள் நடப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த மூவருக்கும் ஏற்பட்ட தொற்று மேற்கு ஆப்பிரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்தோடு தொடர்புடையது என்று உக்சா முதன்மை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் சூசன் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

இப்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 3 தொற்றுகளுக்கு முன்பாக, பிரிட்டனில், 1980 முதல் 8 பேருக்கு மட்டுமே இந்த காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. கடைசியாக இருவருக்கு 2009 இல் இந்த நோய் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் தொற்றிய எலிகளின் சிறுநீர், மலம் கலந்த உணவு அல்லது வீட்டு உபயோகப் பொருள்களுடன் ஏற்படும் தொடர்பு வாயிலாகவே இந்த தொற்று பொதுவில் பரவுவதாக இந்த நோய்க்கான வழிகாட்டி குறிப்பு கூறுகிறது.

இந்த நோய் தொற்றினால், காய்ச்சலும், ஃப்ளூ போன்ற அறிகுறிகளும் ஏற்படும். அத்துடன் மூக்கு, வாய் உள்ளிட்ட உடல் பாகங்களில் இரத்தம் கசிய இந்த நோய் காரணமாக இருக்கும்.

இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட பெரும்பாலானோர் மீண்டுவிடுவார்கள். ஆனால், சிலருக்கு மரணமும் ஏற்படலாம்.