மத்திய அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளில் 1640 மில்லியன் ரூபா மோசடி செய்ய திட்டம்?

Prathees
2 years ago
மத்திய அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளில் 1640 மில்லியன் ரூபா மோசடி செய்ய திட்டம்?

கலகெதர தொடக்கம் ரம்புக்கனை வரையிலான 20 கிலோமீற்றர் மத்திய அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளில் 1640 மில்லியன் ரூபா ஊழல் மோசடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க நேற்று (20) இதனைத் தெரிவித்தார்.

இந்த 20 கிலோமீற்றர் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் அது ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்கான செலவிற்கு சமமாகும் என தெஹிவளை நகர சபை லேனில் உள்ள தேசிய தொழிற்சங்க நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

2015 பெப்ரவரி 27ஆம் திகதி மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி இடம்பெற்று ஏழு வருடங்களின் பின்னர் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதியை நெருங்குகிறது.

20 கிலோ மீற்றர் நிர்மாணத் திட்டத்தின் ஊடாக மத்திய வங்கி மோசடியைப் போன்று பத்து மடங்கு மோசடிகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கலகெதர முதல் ரம்புக்கனை வரையிலான 20 கிலோமீற்றர் மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது

சீன நிறுவனம் மற்றும் இலங்கை ஒப்பந்ததாரர் ஒருவரால் இந்த டெண்டர் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த இரண்டு டெண்டர்களின் தொடர் நடவடிக்கையைத் தொடர்ந்து சீன நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது.

20 கிலோமீற்றர் நிர்மாணப் பணிகளுக்காக சீன நிறுவனம் 1050 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், இலங்கை நிறுவனம் 1872 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இது சீன நிறுவனத்தை விட 822 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகம்.

பொதுவாக உள்ளூர் நிறுவனம் ஏலம் எடுக்கும் போது வெளிநாட்டு நிறுவனத்தை விட குறைவாக ஏலம் எடுக்கும்.

குறைந்த ஏலத்தொகையை சமர்ப்பித்த சீன நிறுவனம் கட்டுமானத் துறையில் அனுபவம் வாய்ந்த நிறுவனமாக இருந்தபோதிலும்இ அந்த நிறுவனம் டெண்டரை வழங்க மறுத்து உள்ளூர் நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கியது.

உள்ளூர் நிறுவனத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சினால் அமைச்சரவையும் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது

இந்த ஒப்பந்தப்புள்ளியை வழங்குவதில் அமைச்சரவையால் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற முடியவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.