நேட்டோ மற்றும் யுக்ரேனுடன் ரஷ்யாவுக்கு தற்போதுள்ள பிரச்னை என்ன?

Prasu
2 years ago
நேட்டோ மற்றும் யுக்ரேனுடன் ரஷ்யாவுக்கு தற்போதுள்ள பிரச்னை என்ன?

ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசின் அங்கமாக இருந்ததுதான் யுக்ரேன்.

அந்த நாடு இதுவரை நேட்டோவில் உறுப்பினர் ஆகவில்லை. ஆனாலும், அது நேட்டோ நேச நாடாக விளங்கி வருகிறது. அப்படியென்றால், எதிர்காலத்தில் எப்போதாவது ஒரு கட்டத்தில் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர யுக்ரேன் அனுமதிக்கப்படலாம் என கருதலாம்.

ஆனால், அப்படியொன்று நடக்கவே கூடாது என்ற உத்தரவாதத்தை மேற்கு நாடுகள் தர வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.

எனினும், நேட்டோவுடன் யுக்ரேன் நட்பு பாராட்டுவதற்கு தடை விதிக்க அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மறுத்து வருகின்றன. தமது பாதுகாப்பு கூட்டாளிகளை சுயமாக தேர்வு செய்யும் சுதந்திரம் இறையாண்மை மிக்க நாட்டுக்கு இருக்க வேண்டும் என்று அந்த நாடுகள் கூறி வருகின்றன.

மேற்கு நாடுகளின் ராணுவ கூட்டணியில் இணையும் தமது இலக்கில் 'வளைந்து கொடுத்துப் போகவே' யுக்ரேன் விரும்புவதாக பிரிட்டனுக்கான யுக்ரேனிய தூதர் வாடிம் ப்ரிஸ்டெய்க் சமீபத்தில் கூறினார்.

ஆனால், அவரது கருத்துடன் முரண்பட்ட யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் செய்தித்தொடர்பாளர், யுக்ரேனிய அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் தமது ஆர்வத்தில் தங்கள் நாடு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.

யுக்ரேனில் ரஷ்யாவுடன் நெருங்கிய சமூக மற்றும் கலசாார தொடர்புகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய இனவாத ரஷ்ய மக்கள்தொகை உள்ளது. கேந்திர ரீதியாக இந்த வாய்ப்பை அந்நாட்டுக்குள் நுழையும் பின்வாசல் வழியாகப் பார்க்கிறது. யுக்ரேனியர்களும், ரஷ்யர்களும் ஒரே மக்கள் என்று எழுதுகிறார் விளாதிமிர் புதின்.