குழந்தைகளிடம் கொரோனாவை தொடர்ந்து ஏற்படும் அழற்சிக்கு மருந்து- ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

Keerthi
2 years ago
குழந்தைகளிடம் கொரோனாவை தொடர்ந்து ஏற்படும் அழற்சிக்கு மருந்து- ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

லேசான அல்லது அறிகுறிகள் இல்லாத கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப்பின் பலவித அழற்சி சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன.

கொரோனா தாக்கத்தால் ஏற்படும் இந்த அதிகமான காய்ச்சல் மற்றும் உயர்மட்ட அழற்சியால் இதயம், மூளை உள்ளிட்ட உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பல வாரங்களுக்கு குழந்தைகளின் உடலில் தங்கியிருப்பதே இதற்கான காரணம் என ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

எனவே இந்த அழற்சி சார்ந்த கொரோனா தாக்கத்துக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தை உருவாக்கும் பணிகளில் அமெரிக்காவை சேர்ந்த மருந்தியல் நிபுணர்கள் ஈடுபட்டனர்.

அதன்படி மேற்படி மிகை அழற்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட 3 முதல் 17 வயது வரையிலான 4 குழந்தைகளுக்கு ‘லாராசோடைடு’ என்ற மருந்தை ஆய்வாளர்கள் வழங்கி பரிசோதித்தனர்.

இந்த மருந்து மேற்படி குழந்தை நோயாளிகளிடம் மிகுந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் குழந்தைகளுக்கான கொரோனாவுக்கு பிந்தைய தாக்கத்துக்கான சிகிச்சைக்கு லாராசோடைடு மருந்தை பாதுகாப்பான மற்றும் பயனுள்ள துணை சிகிச்சையாக வழங்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.