நாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் -உக்ரைனில் தவிக்கும் மாணவர்கள் உருக்கம்

Prasu
2 years ago
நாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் -உக்ரைனில் தவிக்கும் மாணவர்கள் உருக்கம்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கியதும், அங்குள்ள இந்திய மாணவர்கள் பலரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.

உக்ரைனில் இருந்து தாய் நாடு திரும்பும்வரை போதுமான உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றுடன் தயாராக இருக்குமாறு அவர்களிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதன்படி அங்குள்ள இந்திய மாணவர்கள் அனைவரும் ஒரே குழுவாக இணைந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுபற்றி அங்கு தங்கியுள்ள கேரள மாணவர்கள், இங்குள்ள உறவினர்களிடம் கூறியதாவது:-

ரஷிய படைகள் நேற்று உக்ரைனின் கிழக்கு பகுதியில் தாக்குதல் நடத்தியது. இங்குள்ள பல நகரங்கள், ரஷிய படைகளின் வசம் சென்றுவிட்டது.

வான்வெளி தாக்குதல் தொடங்கியதும், எங்களை நிலத்தடி பதுங்கு குழிகளில் பத்திரமாக இருக்கும் படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அதன்படி பல மாணவர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் பூமிக்கு அடியில் உள்ள பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளோம்.

பல மாணவர்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தங்கி உள்ளனர்.

பதுங்கு குழிகளில் தங்கி இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு ஒரு யுகம் போல் தெரிகிறது. இங்குள்ள ஒவ்வொருவரும் பீதியுடனேயே உள்ளனர்.

நாங்கள் அனைவரும் எப்போது சொந்த நாட்டுக்கு வருவோம் என்ற தவிப்பில் உள்ளோம். நாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்.