உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய சுவீடனுக்கு ரஷ்யா எச்சரிக்கை

Mayoorikka
2 years ago
உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய சுவீடனுக்கு ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் இராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷியா கூறி உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல்களால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. 1000க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்களை கொன்றுவிட்டதாக உக்ரைன் கூறி உள்ளது.

போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷியா கூறி உள்ளது. அதேசமயம், உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கையில் எடுக்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். 

உக்ரைனில் தற்போதைய அரசை அகற்றிவிட்டு இராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் எளிதான தீர்வை எட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேட்டோ நாடுகள் நேரடியாக உதவ முடியாத நிலையில், ஸ்வீடன் அரசு உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது. இது ரஷியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதனால், ஸ்வீடன் அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேட்டோ அமைப்பில் சேர ஸ்வீடன் மற்றும் பின்லாந்து முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா கூறி உள்ளது.