பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும்! - சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்

#SriLanka
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும்! - சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்

"நாட்டில் இன, மத பேதமின்றி சகல மக்களுக்கும் எதிராகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தப்படும் நிலைமையே உருவாகியுள்ளது. ஆகவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி  நாம் முன்னெடுத்துள்ள போராட்டமும் இறுதி வரையில் கொண்டுசெல்லப்படும். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரையில் எமது போராட்டத்தைக் கொண்டு செல்வோம்."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ச்சியாக முன்வைத்து நாடு பூராகவும் அதற்கான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

ஆரம்பத்தில் இருந்தே தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட இந்தச் சட்டமானது இன்று நாட்டில் சகல மக்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும் நிலைமையே உருவாகியுள்ளது. ஆகவே, இன, மத, பேதம் இன்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சகலரும் முன்வைத்து வருகின்றனர்.

ஏற்கனவே முன்னைய ஆட்சியில் இந்தச் சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு அதற்குப் பொது இணக்கம் காணப்பட்ட போதலும் 2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற அரசியல் குழப்பங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர் நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

 எனினும், இன்று நிலைமைகள் சுமுகமாக உள்ள காரணத்தால் இதனை நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச நாடுகளும், அமைப்புகளும் தொடர்ச்சியாக வலியுறுத்திக்கொண்டுள்ளன.

இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிலும் இந்த விடயங்கள் வலியுறுத்தப்படும். இப்போது நாம் முன்னெடுத்துள்ள போராட்டமும் இறுதி வரையில் கொண்டுசெல்லப்படும். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரையில் எமது போராட்டத்தைக் கொண்டு செல்வோம்" - என்றார்.