இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை

Prasu
2 years ago
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை

முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை பெற்று வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இன்று முதல் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன வெளியிட்ட புதிய சுற்று நிரூபத்தில், “முழுமையாக தடுப்பூசிகளை பெற்று 2 வாரங்கள் நிறைவடைந்த சுற்றுலாப் பயணிகள் பி.சி.ஆர். அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

8 வயது அல்லது அதற்கு குறைந்த சிறார்கள், ஒரு தடுப்பூசியேனும் ஏற்றியிருப்பின் அது முழுமையான தடுப்பூசி ஏற்றிக்கொண்டதாக கருதப்படும்.

எவ்வாறாயினும், 12 அல்லது அதற்கு மேற்பட்ட வயதானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்காவிடின், நாட்டிற்கு வருகை தருவதற்கு 72 மணித்தியாலத்திற்குள் பெற்றுக்கொண்ட பி.சி.ஆர். அறிக்கையை சமர்பிப்பது கட்டாயமானது.

அதே போன்று ஏதேனுமொரு தடுப்பூசியை ஒரு தடவை மாத்திரம் பெற்றுக் கொண்டால் போதும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்குமாயின், அவ்வாறான தடுப்பூசியைப் பெற்று நாட்டுக்கு வருபவர்களும் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களாகவே கருதப்படுவர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 7 நாட்களின் பின்னர் முதற்கட்ட தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக் கொண்டவர்கள் வருகை தருவார்களாயின், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமைக்கான பி.சி.ஆர். அல்லது அன்டிஜன் அறிக்கையையும், முதற்கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதற்கான அட்டையையும் தம்வசம் வைத்திருக்க வேண்டும்.

கடந்த ஆறு மாதங்களுக்குள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுள்ளவர்கள் தடுப்பூசியைப் பெற்று இரு வாரங்களின் பின்னர் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையை தம்வசம் வைத்திருக்க வேண்டும்.

நாட்டுக்கு வரும் அனைத்து சுற்றுலாப்பயணிகளும் தம்வசம் வைத்திருக்கும் கொரோனா பரிசோதனை அறிக்கைகள் மற்றும் தடுப்பூசி அட்டைகள் ஆங்கில மொழியில் காணப்பட வேண்டும்.

மார்ச் மாதம் முதலாம் திகதி நள்ளிரவு முதல் இந்த புதிய வழிகாட்டல்கள் நடைமுறைப் படுத்தப்படும். உலக மற்றும் தேசிய மட்டத்திலான கொவிட் நிலைமைகளை ஆராய்ந்து அதன் பின்னர் புதிய வழிகாட்டல்களின் மாற்றங்கள் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.