டொலருக்கு நிகரான ரூபாயை வலுப்படுத்த எந்த அரசாங்கத்தாலும் முடியவில்லை: சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

Mayoorikka
2 years ago
டொலருக்கு நிகரான ரூபாயை வலுப்படுத்த எந்த அரசாங்கத்தாலும் முடியவில்லை: சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

ஸ்ரீலங்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்தமையால்,  அதிருப்தியடைந்ததாகவும், அவ்வாறானதொரு அரசாங்கத்தை  உருவாக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, தமக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்ட போதிலும், கடந்த ஆட்சிக்காலத்தில் நாடு எவ்வாறு இயங்கியது என்பது தொடர்பில் தமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும், கடந்த காலத்திலிருந்து விலகியுள்ளதாகவும் ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போது இரு தரப்பிலும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், எனவே அவர்கள் இருபுறமும் இருக்க விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

நாட்டின் தற்போதைய நிலைக்கு நாட்டை நிர்வகித்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் பெற்றதில் இருந்து டொலருக்கு நிகரான ரூபாயை வலுப்படுத்த எந்த அரசாங்கத்தாலும் முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.