ஸ்ரீலங்காவிற்கான அரிசி ஏற்றுமதியின் ஊடாக மியன்மாருக்கு அதிக வருமானம்: அந்நாட்டு ஊடகம் தகவல்

Mayoorikka
2 years ago
ஸ்ரீலங்காவிற்கான அரிசி ஏற்றுமதியின் ஊடாக மியன்மாருக்கு அதிக வருமானம்: அந்நாட்டு ஊடகம் தகவல்

ஸ்ரீலங்காவிற்கான அரிசி ஏற்றுமதியின் ஊடாக மியன்மார்  ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதியை விட அதிக விலையைப் பெற்றுக்கொள்வதாகவும்,  ஏற்றுமதி செயற்பாடுகளும் இலகுவாக அமைந்துள்ளதாகவும் மியன்மார் நாட்டின் ஊடகமான, குளோபல் நியூ லைட் ஒப் மியன்மார் தெரிவித்துள்ளது.

ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒரு தொன் அரிசிக்கான ஏற்றுமதி விலை 340 முதல் 350 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்ற நிலையில், ஸ்ரீலங்காவிற்கான ஏற்றுமதி விலை தொன் ஒன்றுக்கு 440 முதல் 450 அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மியன்மாரின் அரிசி கடந்த வருடங்களாக ஸ்ரீலங்காவிற்கு ஏற்றுமதிசெய்யப்படுவதாகவும், அது வெற்றியடைந்துள்ளதாகவும், கடல் மார்க்கமாக மியன்மார் அரிசியை ஸ்ரீலங்காவிற்கு ஏற்றுமதி செய்ய முடியும் எனவும்,  அந்நாட்டு அரிசி மொத்த விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 

மேலும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஸ்ரீலங்காவிற்கான அரிசி ஏற்றுமதி மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அரிசியின் தரத்தை ஸ்ரீலங்கா மட்டுப்படுத்தவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஸ்ரீலங்காவிற்கு எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு, ஒரு இலட்சம் தொன் வெள்ளை அரிசி மற்றும் 50 ஆயிரம் தொன் புழுங்கல் அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் ஜனவரி 7ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.