ரஷ்யா – உக்ரைன் போரினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சாவல்!

Nila
2 years ago
ரஷ்யா – உக்ரைன் போரினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சாவல்!

இலங்கை விமானப்படை வசம் இருக்கும் விமானங்களில் அதிகமானவை ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டவை என்பதால் விமானங்களுக்கு தேவைப்படும் உதிரிப்பாகங்களை தற்பொழுது பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன (Sudarshana Pathirana) தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலின் காரணமாக இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படையின் 71 ஆவது ஆண்டு பூர்த்தியை அடுத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக இலங்கை விமானப்படை வசமுள்ள விமானங்களில் அதிகமானவை ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டவை அல்லது சோவியத் யூனியர் காலத்தில் பெற்றுக்கொண்ட விமானங்களாகும்.

ஆகவே எமது விமானங்களை புனரமைக்க அல்லது ஏதேனும் தேவைகள் இருப்பின் பெற்றுக்கொள்ள அவர்களின் ஒத்துழைப்புகள் மற்றும் உதவிகள் தேவைப்படும். இருப்பினும், இன்று இவ்விரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக எம்மிடம் உள்ள விமானங்களை பத்திரப்படுத்தி வைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆகவே இப்போது எம்மிடம் உள்ள ரஷ்யா – உக்ரைன் விமானங்களை கவனமாக பராமரிக்கவும் தேவையான சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தவும் இலங்கை விமானப்படைக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல் இந்த இரண்டு நாடுகள் தவிர்ந்து ஏனைய சில நாடுகளிடம் இருந்தும் விமானங்களை பெற்றுக்கொண்டுள்ள காரணத்தினால் அவர்களுடன்

நாம் தொடர்புகொண்டு எமது விமானங்களுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் மற்றும் பராமரிப்புக்கு தேவையானவற்றை பெற்றுக்கொண்டு எமது விமானங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். ரஷ்யா – உக்ரேன் இடையேயான மோதல் எமக்கும் பல்வேறு படிப்பினையை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. விமானப்படையாக நாமும்

எமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டின் ஐக்கியத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்கும் விதமாகவும் ஆகாய எல்லையை பாதுகாக்கும் விதமாகவும் விசேட ரேடார் கட்டமைப்பு, தாக்குதல் விமானங்கள் மற்றும் மிசேல் போன்றவற்றை கொண்டு ஆகாய எல்லைகளை பலப்படுத்தியுள்ளோம் என்றார்.