அமீரகத்துக்கு, உக்ரைன் மக்கள் விசா இல்லாமல் நேரடியாக வரலாம்:அமீரக வெளியுறவுத்துறை அதிகாரி
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், அமீரகத்துக்கு, உக்ரைன் மக்கள் விசா இல்லாமல் நேரடியாக வரலாம் என்று வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சகத்தின் தூதரக ஆலோசனை பிரிவின் உதவி செயலாளர் பைசல் லுட்பி கூறியதாவது:-
கடந்த புதன்கிழமை இரவு அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சகம் உக்ரைன் மக்கள் வருகை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி அங்கு வசிக்கும் உக்ரைன் நாட்டு மக்கள் அமீரகத்துக்கு வருகை புரிய விசா தேவையில்லை. நேரடியாக பாஸ்போர்ட்டுடன் வருகை புரிந்து விமான நிலையங்களில் வருகைக்கான விசாவை பெற்றுக்கொள்ளலாம்.
இதற்காக அமீரகத்தில் உள்ள உக்ரைன் நாட்டு தூதரகத்தின் ஒத்துழைப்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் மக்களுக்கு தேவையான உதவிகளை மற்றும் சேவைகளை வழங்கவும் அமீரகம் தயாராக உள்ளது.
உக்ரைன் நாட்டுக்கு ஏற்கனவே அமீரகம் சார்பில் 50 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐ.நாவின் மனிதாபிமான உடனடி நடவடிக்கைகளின் அடிப்படையிலும், உக்ரைனுக்கான பிரதேச அகதிகள் மறுவாழ்வு திட்டத்திற்காகவும் இந்த பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி உக்ரைனில் உள்ள மனிதாபிமான நிலை குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கூறப்பட்டதுபோல் பாகுபாடு மற்றும் தடைகள் இல்லாமல் நாட்டை விட்டு அங்கு வசிப்பவர்கள் வெளியேற பாதுகாப்பாக அனுமதிக்க வேண்டும் என்பதை அமீரகம் வலியுறுத்தி வருகிறது.