பயங்கரவாதச் சட்டம், இராணுவமயமாக்கல்: ஐநாவில் முறையிட்டார் ஹரீன் பெர்னாண்டோ

Mayoorikka
2 years ago
பயங்கரவாதச் சட்டம், இராணுவமயமாக்கல்: ஐநாவில் முறையிட்டார்  ஹரீன் பெர்னாண்டோ

பயங்கரவாதச் சட்டம், இராணுவமயமாக்கல் மற்றும் இலங்கையில் ஒட்டுமொத்தமாக சீரழிந்து வரும் மனித உரிமை நிலைமை தெடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ ஐநா மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமை, தாக்குதல்களின் பின்னணியில் இருப்பவரை பாதுகாக்கும் நடவடிக்கைகள் கவலைகளை எழுப்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் தண்டனைகளை வழங்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் தயங்குவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க முடியாத நிலை மற்றும் அரச உயர்மட்ட பதவிகளில் இராணுவ அதிகாரிகள் நியமிப்பு, சிறுபான்மையினரின் பிரச்சினைகள் மற்றும் ரஞ்சன் ராமநாயக்கவின் சிறைவாசம் குறித்தும் ஹரீன் பெர்னாண்டோ தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு, மின்வெட்டு, எரிபொருளுக்கான நீண்ட வரிசையில் நிற்பது மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவை குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே முன்னெப்போதையும் விட அதிகமான மனித உரிமை அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் இலங்கை மக்களுக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கேட்டுக்கொண்டார்.