32 ஆண்டுகளுக்கு பிறகு என் கனவு பலித்தது! - பேரறிவாளன் தாயார் தெரிவித்துள்ளார்

#SriLanka #India #Tamil Nadu
32 ஆண்டுகளுக்கு பிறகு என் கனவு பலித்தது! -  பேரறிவாளன் தாயார் தெரிவித்துள்ளார்

பேரறிவாளன் சுதந்திர மனிதராக நடமாட வேண்டும் எனும் நீண்ட நாள் கனவு பலித்தது என அற்புதம்மாள் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தரப்பில் விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரரான பேரறிவாளன் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில்,பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது, உடல் ஆரோக்கியம் கருதி அவ்வப்போது பரோல் நீட்டித்து வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பிணை கிடைக்க 32 ஆண்டுக் கால போராட்டம் ஆகும். சிறையில் பேரறிவாளனின் நன்னடத்தை, கல்வி, உடல்நிலை இதைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால நிவாரணமாகப் பிணை வழங்கியுள்ளனர். மேலும்,எனது மகன் பூரண சுதந்திர மனிதராக நடமாட வேண்டும் எனக் காத்திருந்தேன். எனது கனவு பலித்தது. மகிழ்ச்சியாக உள்ளது.

இதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக எனது வேதனையை வெளிப்படுத்திய ஊடகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் விடுதலை கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.