இலங்கையில் அத்தியவசிய தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத அரசாங்கம் ஒரு லட்சம் ரூபா கொடுப்பதற்கு காரணம் என்ன?

#SriLanka
Nila
2 years ago
இலங்கையில் அத்தியவசிய தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத அரசாங்கம் ஒரு லட்சம் ரூபா கொடுப்பதற்கு காரணம் என்ன?

மக்களின் அத்தியவசிய தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் உறவுகளுக்கு வாழ்வாதாரம் வழங்க முனைவதற்கு காரணம் என்ன? என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்பின் இணைப்பாளர் கலாறஞ்சினி கேள்வி எழுப்பியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களிற்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கான யோசனையை நீதியமைச்சர் அலிசப்ரி முன்வைத்திருந்த விடயம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. எங்களுடைய உறவுகள் காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

49 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது குடும்பங்களிற்கு வாழ்வாதாரமாக ஒரு லட்சம் ரூபா கொடுக்க போகிறதாக நானும் அறிந்தேன்.

ஆனால் இந்த பொருளாதார நெருக்கடிக்குள் அரசாங்கம் தன்னையே பாதுகாக்க முடியாத நிலையில் இருக்கின்ற போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்சம் ரூபா கொடுப்பதற்கு காரணம் என்ன? என்பது எங்களுக்கு ஒரு கேள்வி குறியாக இருக்கிறது.

கொடூர யுத்தமும், இன அழிப்பும் நடைபெற்றதன் பிற்பாடு ஒப்படைத்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கூற முடியாது இருக்கிறது.

2016 ஆம் ஆண்டு காணாமல் போன உறவுகளுக்கான அலுவலகம் ஒன்றை திறந்து அதனூடாக நான்கு பொறிமுறைகளை உருவாக்குகின்றோம்.

அதனூடாக தீர்வுகள் கிடைக்கும் என கூறியிருந்தார்கள். இப்போது 2022 ஆம் ஆண்டு ஆகிவிட்டது. இற்றைவரைக்கும் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களுக்கு பதில் கூற முடியாத அரசாங்கம்.

குறுகிய கால நாட்களுக்குள் நீதி அமைச்சர் காணாமல் போன உறவுகளுக்கு இழப்பீடும், மரணசான்றிதழும் தருவதற்காகவே வடக்கிற்கு வருகை தந்திருந்தார்.

ஒருசிலருக்கு சொத்து இழப்பென கூறி ஒரு லட்சம் ரூபாவினை வழங்கியிருக்கின்றார்.

ஆனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தில் இருந்து கொண்டு தங்களுடைய உறவுகளை தேடுகின்ற குடும்பங்கள் ஒருபோதும் தங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதனை அறியாமல் இழப்பீடுகளோ, வாழ்வாதாரங்களோ எதையுமே எதிர்பார்க்க மாட்டார்கள். வாங்க போவதும் இல்லை.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சான்றிதழையும், இழப்பீட்டையும் எப்படியாவது வழங்கி இப் போராட்டத்தை மழுங்கடிக்க செய்து , போராட்டத்தை இல்லாது செய்து காணாமல் போன உறவுகளை தேடுகின்ற அமைப்புக்களையும் இல்லாது செய்து இக் குடும்பங்களை நிர்க்கதியாக்கி யுத்தத்திலே யாரையுமே கொல்லவில்லை என்பதனை உலகிற்கு காட்டுவதற்கு இந்த அரசாங்கம் முனைந்திருக்கின்றது.

ஆனால் அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இன்று எரிபொருட்கள் தட்டுப்பாடு , அத்தியாவசிய பொருட்களை பெறமுடியாத நிலை. வடபகுதி, தென்பகுதி மக்கள் எவ்வளவு கஷ்ரப்படுகின்றார்கள். அதனை நிவர்த்தி செய்ய முடியாத அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் உறவுகளுக்கு வாழ்வாதாரம் வழங்க முனைவதற்கு காரணம் என்ன?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தில் இருப்பவர்கள் ஒருபோதும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என மேலும் தெரிவித்தார்.