தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 71.

#history #Article #Tamil People
தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 71.

சோழர் வரலாறு - கி.மு. மூன்றாம் நூற்றாண்டுச் சோழன்

செருப்பாழி எறிந்த இளஞ் சேட்சென்னி
(கி.மு. 290 - 270)

இவன் காலத்திற்றான் தமிழகத்தில் மோரியர் படையெடுப்பு நடந்ததைப் பல பாடல்கள் குறிக்கின்றன. பழந்தமிழர், மோரியர்க்கு முற்பட்டுப் பாடலியைத் தலைநகரமாகக் கொண்டு மகத நாட்டை ஆண்ட நந்தர் என்பவரையும் நன்கறிந்திருந்தனர் என்பது பல பாக்களால் அறியக் கிடக்கும் உண்மை ஆகும்.[1]

சந்திரகுப்த மோரியன் காலத்துப் பேரமைச்சனான சாணக்கியன் தனது பொருள் நூலில், தமிழகத்திலிருந்து இரத்தினங்கள், சேரநாட்டு வைடுரியங்கள், கருநிறமுள்ள பாண்டிய நாட்டுச் சால்வைகள், மதுரை மெல்லிய ஆடைகள் முதலியன சந்திரகுப்தன் பண்டாரத்திற்கு அனுப்பப்பட்டன’ என்று வரைந்துள்ளமை,[2] தமிழகத்திற்கும் மகதப் பேரரசிற்கும் இருந்த தொடர்பை வலியுறுத்துவதாகும்.

இதனால் பழந்தமிழர் நந்தர் பாடலியை மட்டுமே அன்றி, மோரியர் பாடலியையும் நன்கு அறிந்திருந்தனர் என்பது அங்கைக் கனியாகும். எனவே, தமிழ்ப் புலவர் தெளிவாக ‘மோரியர்’ எனக் குறித்தல் சந்திர குப்த மோரியர் மரபினரையே ஆகும் என்பதில் ஐயம் இல்லை.மேலும், நம் முன்னையோர் வடநாட்டவரை வேறு வேறாகவே பிரித்து வழங்கினர்: ‘வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேயம்’ என்பதை அவர்களே கூறி, ஆண்டுறைந்தவரை வடுகர் என்றும், அதற்கு (விந்தமலைக்கு) அப்பாற்பட்டவரை வடவடுகர்[3] (அக்கால மகத நாட்டினர்) என்றும் குறித்துள்ளனர்.

மாமூலனார் என்னும் நல்லிசைப் புலவர் சிறந்த வரலாற்று உணர்ச்சி உடையவராகக் காணப்படுகிறார். அவர் ஒரே செய்யுளில் நந்தரைக் குறித்துப் பின் மோரியர் படையெடுப்பையும் கூறியுள்ளார். புலவர் பலர் இச் செய்தியைக் குறித்துள்ளனர்:

“கனைகுரல் இசைக்கும் விரைசெலற் கடுங்கனை
முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்றிகை மாதிரம் முன்னிய வரவிற்கு”[4]

“மோகூர்

பணியா மையின் பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்”[5]

“விண்பொரு நெடுவரை இயல்சேர் மோரியர்
பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த”[6]

“வெள்வேல்

விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த”[7]


இச்செய்யுள் அடிகளையும் பின் வரும் அடிகளையும் நன்கு ஆராயின், மோரியர்க்கு உதவியாக வடுகர் என்பாரும் கோசர் என்பாரும் ஆக இருவகைப் படைவீரர் இருந்தனர் என்பது பெறப்படும். இவ்விரு திறத்தாரைக் கொண்ட இரு வேறு படைகளை மோரியர் முன் அனுப்பித் தாம் பின் சென்றதாகப் பாடல் அடிகள் பகர்கின்றன. அடிமைப்பட்ட நாட்டு வீரரை, அவரை ஆட்கொண்ட பிறநாட்டார் தாம் படையெடுக்கும் முன்னர்ப் புகவிடல் இன்றும் நடைபெறுகின்ற வழக்கமே அன்றோ? மகதப் பேரரசை நடத்திய மோரியர், தாம் வென்றடக்கிய வடுக வீரரையும் கோசரையும் இம்முறையில் தம் தமிழகப் படையெடுப்புக்குப் பயன்படுத்தினர்.

வடுகராவார்

"பனிபடு வேங்கடத் தும்பர்
மொழிபெயர் தேஎத்தர்”[8]
“கல்லா நீள்மொழிக் கதநாய் வடுகர்”[9]
“கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர்”[10]

எனப் புலவர் குறித்துள்ளமையின், தெலுங்கரும் கன்னடருமே ஆவர் என்பது பெறப்படுகிறது. கோசர் ஆவார், வடவடுகர்[11] எனப்படுவர். இவர் கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்தவராகலாம் என டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் கருதுதல் பொருத்தமுடையதே ஆகும்.[12] இக்கோசர், ‘சொற்படி நடப்பவர்; அவர் இடம் நெய்தலஞ் செறு’[13] எனச் சில அடிகள் குறிக்கின்றன.

இம்மோரியர் படையெடுப்பில் இக்கோசர்தம் ஆற்றல் கண்ட தமிழ் மன்னர் அவரைத் தம் சேவகத்தில் வைத்துக் கொண்டனர் போலும்! இக்கோசரே அசோகன் கல்வெட்டுகளிற் கண்ட ‘சத்தி புத்திரர்’ ஆகலாம் என்று பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கருதுகின்றனர்.[14] கோசர் எவரே ஆயினும், தமிழகத்துக்குப் புதியவர் என்பதில் ஐயமில்லை.

தொடரு

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!