அரசியல் அரங்கில் காலம் சரியானதை நிரூபிக்கிறது - அமைச்சர் டக்ளஸ்

#SriLanka #Time #Douglas Devananda
அரசியல் அரங்கில் காலம் சரியானதை நிரூபிக்கிறது - அமைச்சர் டக்ளஸ்

அரசியல் அரங்கில் ஈ.பி.டிபி. தொடர்ச்சியாக வலியறுத்தி வருகின்ற நிலைப்பாடுகள் சரியானது என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதன் மூலம் மாகாணசபை முறைமையினை முழுமையாக அமுல்ப்படுத்துவதை ஆரம்பமாகக் கொண்டு, எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியும் என்று ஈ.பி.டி.பி.  வலியுறுத்தி வருகின்ற நிலையில்,  ஏனைய தமிழ் தரப்புக்கள் அந்த நிலைப்பாட்டினை சுயலாப அரசியலுக்காகவேனும் பின்பற்றுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  ஈ.பி.டி.பி. வலியுறுத்துகின்ற 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாணசபை முறைமையே சாத்தியானது என்பதை சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் வெளிப்படையாக அறிவித்து  வருகின்றமையையும் சுட்டிக்காட்டினார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இன்று (26.03.2022) நடத்திய கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கட்சியின் யாழ் தலைமை செயலகத்தில்  நடைபெற்ற  இக்கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 

" இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்மையில் கடிதம் எழுதிய தரப்புகளாக இருந்தாலென்ன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சர்வ கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட தரப்புக்களாக இருந்தாலென்ன, 13 ஆவது அரசியல் திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபையையே வலியுறுத்தியுள்ளனர். 

இதை கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஈ.பி.டி.பி. வலியுறுத்திய சந்தர்ப்பங்களில் எல்லாம், எம்மை தமிழ் மக்களுக்கு விரோதமானவர்களாகவும் - தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முரணான கருத்துக்களை தெரிவிப்பவர்களாகவும் இதேதரப்பினர் மக்களிடம் கூறிவந்தனர்.

சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு மட்டற்ற அதிகாரங்களூடனான தீர்வினை வழங்கும் என்றும் கூறிவந்தனர். 

ஆனால், ஈ.பி.டி.பி. கட்சியினால் முன்வைக்கப்படுகின்ற நிலைப்பாடுகளும் பொறிமுறைகளுமே யதார்த்தமானது என்பது சர்வதேச நாடுகளினாலும் சர்வதேச அமைப்புக்களாலும்  வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  தமது அரசியல் இருப்பிற்காக காலத்துக்கு காலம் சுருதியை மாற்றுகின்ற குறித்த தமிழர் தரப்புக்கள் இப்போது எமது வழிமுறைக்கு வந்துள்ளனர். 

இதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று தெளிபடுத்துவதன் மூலம் எதிர்காலத்திலாவது மக்கள் ஏமாறாமல் சரியானவர்களை தெரிவு செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்  எனவும் தெரிவித்தார்.