இந்த அரசாங்கம் தோல்வியடைந்தால், அதற்கான பொறுப்பினை பசில் ஏற்க வேண்டும்

Mayoorikka
2 years ago
இந்த அரசாங்கம் தோல்வியடைந்தால், அதற்கான பொறுப்பினை பசில் ஏற்க வேண்டும்

இந்த அரசாங்கம் வீட்டுக்கு போனால் அதற்கான முழுப் பொறுப்பினையும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஏற்க வேண்டுமென பெப்பிலியான சுனேத்ராதேவி பிரிவெனவின் பீடாதிபதி கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,

பசில் ராஜபக்சவை ஏற்றுக்கொள்ள மக்கள் விரும்பவில்லை, நாளை அவர் எமக்கு என்ன செய்வார் என்பது தெரியவில்லை. நான் சொல்லுவது கடுமையாக இருக்கலாம்.

மக்கள் இன்று நெருக்கடியான நிலையை எதிர்நோக்கியுள்ளனர். இந்த அரசாங்கம் தோல்வியடைந்தால் அதற்கான பொறுப்பினை பசில் ஏற்க வேண்டும்.

புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குமாறு நான் ஜனாதிபதியிடம் கூறினேன். குறிப்பாக இரட்டைக் குடியுரிமை குறித்த விடயங்களை உள்ளடக்கப் போவதில்லை என கூறினார்.

சந்திரிக்கா, ரணில், மைத்திரி ஆகியோரினால் இதைச் செய்ய முடியவில்லை என கூறினேன். நான் அவர்களைப் போல அல்ல என கோட்டாபய என்னிடம் கூறினார்.

எனினும் இன்று 11 மணித்தியால மின் வெட்டு நாட்டில் நடைமுறைப்படுத்தும் அளவிற்கு பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

எல்லாவற்றுக்கும் கோவிட் பெருந்தொற்றை காரணம் காட்டி தப்பித்துக்கொள்ள முடியாது.

அதிகாரத்திற்கு வரும் போது கூறியதற்கும் அதிகாரம் கிடைத்த பின்னர் நடந்து கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.