ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலரை சந்திக்க தயாராகி வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

#government #India #Lanka4
Reha
2 years ago
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலரை சந்திக்க தயாராகி வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளார்.

எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அவரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதுடன், நாளைய தினம் கொழும்பில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரின், இலங்கை பயணத்தின்போது இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், இலங்கை இந்தியாவிடம் எதிர்பார்க்கும் முக்கிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் அதன் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பர் என கூட்டமைப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அத்துடன், ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்றிருந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட மற்றும் இணக்கம் ஏற்பட்ட விடயங்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளும், இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதன்போது, மலையக மக்களின் அபிலாசைகள் தொடர்பில், இந்திய பிரதமருக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி அனுப்பி வைத்துள்ள ஆவணம் குறித்து கலந்துரையாடப்படும் என அதன் இணைத்தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.