தேசிய அரசில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கக் கோரினால் பரிசீலனை செய்யத் தயார்! - ஐ.தே.க. தலைவர் ரணில் அறிவிப்பு

#government #Ranil wickremesinghe #Lanka4
Reha
2 years ago
தேசிய அரசில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கக் கோரினால் பரிசீலனை செய்யத் தயார்! - ஐ.தே.க. தலைவர் ரணில் அறிவிப்பு

"தேசிய அரசு தொடர்பாகவோ, அதில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்பது தொடர்பிலோ அரச தரப்பில் இருந்து நேரடியாக என்னுடன் யாரும் எதுவும் பேசவில்லை. அவ்வாறான வேண்டுதல்கள் முன்வைக்கப்பட்டால் பரிசீலித்து முடிவெடுப்பேன். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எதையும் செய்யத் தயாராகவுள்ளேன்." - இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

'சர்வகட்சி மாநாட்டில் நீங்கள் கலந்துகொண்ட பின்னர், மக்கள் மத்தியில் ஓர் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கக் கூடியவராக தங்களைக் கருதுகின்றார்கள். இவ்வாறான சூழலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், தங்களைத் தேசிய அரசின் பிரதமராக நியமிக்க முயன்று வருகின்றார் எனவும், அதற்கு முன்னோடியாகவே அன்றைய கூட்டத்தில் தங்களிடம் மன்னிப்புக் கோரினார் எனவும் கூறப்படுகின்றது. அவ்வாறான முயற்சிகள் இடம்பெறுகின்றனவா? அவ்வாறான பொறுப்பு உங்களிடம் முன்வைக்கப்பட்டால் நீங்கள் பதவியை ஏற்றுக்கொள்வீர்களா?" என்று கொழும்புச் செய்தியாளர் ஒருவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர்,

"நாட்டினதும் மக்களினதும் நலன் கருதியே சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்றேன். இந்த மாநாட்டைக் கூட்டச் சொல்லி பல மாதங்களுக்கு முன்னரே அரசிடம் கோரியிருந்தேன். காலம் தாழ்த்தியாவது மாநாட்டைக் கூட்டிப் பிரச்சினைகளை ஆராய்ந்திருக்கின்றார்கள். எனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளேன். அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகளைப் பொறுந்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தேசிய அரசு தொடர்பாக அரச தரப்பில் இருந்து நேரடியாக என்னுடன் யாரும்  எதுவும் பேசவில்லை. அப்படியான வேண்டுதல்கள் முன்வைக்கப்பட்டால் பரிசீலித்து முடிவெடுப்பேன். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எதையும் செய்யத் தயாராகவுள்ளேன்" - என்றார்.