ஜனாதிபதி நாளை இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றுவார்

#SriLanka #Sri Lanka President #Tech
ஜனாதிபதி நாளை இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றுவார்

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் 5 ஆவது மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வான அமைச்சர்மட்டக்கூட்டம் இன்று (29) கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய 7 நாடுகள் அங்கம்வகிக்கும் இந்த பிம்ஸ்டெக் அமைப்பின் 5 ஆவது மாநாடு நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று நடைபெற்ற 18 ஆவது அமைச்சுமட்டக்கூட்டத்தில் உறுப்புநாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

அதன்படி பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களான (முறையே) கலாநிதி ஏ.கே.அப்துல் மொமென், கலாநிதி தன்டி டோர்ஜி, கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், கலாநிதி நாராயண் கட்கா, டொன் ப்ரமுத்வினை ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றிருந்ததுடன் மியன்மார் சார்பில் அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலந்துகொண்டிருந்தார். 

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் உரையுடன் இம்மாநாடு ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து ஏனைய உறுப்புநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் உரைகளும் இடம்பெறவிருந்த போதிலும், அமைச்சர் பீரிஸின் உரையைப் பார்வையிடுவதற்கு மாத்திரமே ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் மாநாட்டின் மூன்றாம் நாளான நாளைய காலை 9 மணிக்கு பிம்ஸ்டெக் அமைப்பின் 5 ஆவது அரசதலைவர்கள் மாநாடு நடைபெறவிருப்பதுடன் இதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மெய்நிகர்முறைமையின் ஊடாக உரை நிகழ்த்துவார். அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகளின் அரசதலைவர்களும் மெய்நிகர்முறைமையின் ஊடாக உரையாற்றுவர்.

அத்தோடு இம்மாநாட்டில் பிம்ஸ்டெக் சாசனம் ஏற்கப்பட்டு, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.