இன்றைய வேத வசனம் 03.04.2022:நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜனங்களையும் சீடராக்குங்கள்"

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 03.04.2022:நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜனங்களையும் சீடராக்குங்கள்"


இயேசு கிறிஸ்து தமது சீடர்களிடம் "நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜனங்களையும் சீடராக்குங்கள்" என்று கட்டளை கொடுத்தார் இங்கே எப்படி என்று திட்டவட்டமான முறையான விளக்கத்தையும் கொடுத்தார். (மத்தேயு 28:16 - 20)

இவ்வசனங்களை கிறிஸ்துவின் பிரதான கட்டளை என்று அழைக்கிறோம். இவ்வசனங்களில் சீடராக்குங்கள் என்ற வார்த்தை ஓர் திட்டவட்டமான கட்டளையாகும்.

இக்கட்டளையின் இலக்கண வடிவமைப்பு வேத வல்லுநர்களால் அதிமுக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஜனங்களைக் கிறிஸ்துவின் சீடர்களாக மாற்ற புறப்பட்டுச் செல்ல வேண்டும். நற்செய்தியை அறிவிக்க வேண்டும். கிறிஸ்துவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஞானஸ்தானம் கொடுக்க வேண்டும். மேலும் தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ள உபதேசம் செய்ய வேண்டும்.

அப்படியானால், ஞானஸ்நானம் என்பது நற்செய்தியை ஒரு மனிதன் ஏற்றுக்கொண்டபோது நடக்கும் செயல், நான் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்ததால் எனக்கு ஞானஸ்நானம் வேண்டும் என்பது அல்ல, மாறாக, நான் கிறிஸ்துவின் பிள்ளையாக அவருடைய குடும்பத்தின் அங்கமாகிவிட்டேன் என்பதற்காகவே ஞானஸ்நானம்!

சரி, அப்படியானால் எவ்விதமான ஞானஸ்நானம் ஏற்றுக் கொள்ளத்தக்கது என்ற கேள்வி இன்று அநேகரிடம் உண்டு.

ஞானஸ்தானம் என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் "பாப்டிசோ" என்ற வார்த்தையே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இது மூழ்கவைத்தல், முக்கியெடுத்தல், கழுவுதல், ஊற்றுதல் எனப் பொருள் தருகிறது.

வேதத்தின் அடிப்படையில் நாம் வசனங்களைப் பார்க்கும்போது, ஆதித் திருச்சபையில் நடத்தப்பட்டவைகளில் பெரும்பாலும், "மூழ்கிய ஞானஸ்தானமே" என்று கூறுகின்றனர்.

ஆனால் பரிசுத்த பவுலும் மற்ற அப்போஸ்தலர்களும் ஞானஸ்னானம் முறைகளை குறித்து அதிகமாக எதுவும் எழுதவும் இல்லை முக்கியத்துவம் கொடுக்கவும் இல்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. (கொரிந்தியர் 1:12-17).

முறைகள் ஒருவேளை வித்தியாசமானதாக இருந்தாலும் ஞானஸ்நானத்தின் அர்த்தம் மாறாதவையாக இருக்க வேண்டும்.

அப்போஸ்தல நடபடிகளில் ஞானஸ்தானம் எப்போதுமே கிறிஸ்துவின் சபைக்குள்ளாக விசுவாசிகளை சேர்க்கும் ஆரம்பச் சடங்காகவே இருந்தது.அது கிறிஸ்துவின் மரணம், அடக்கம்பண்ணபடுதல், உயிர்த்தெழுதலில் நம்மைப் பங்கு கொள்ளச் செய்தல் மற்றும் அதற்கு நாங்கள் சாட்சிகள் எனவும் கூறுகிறது. (அப்போஸ்தலர் 8:34-40; 10:44-48; 16:31-34).

பிற சமயங்களிலும் தண்ணீரினால் சுத்திகரிக்கும் முறைகளும், சடங்குகளும் அனேகம் உண்டு. மனிதனின் உள்ளான நிலையை சுத்திகரித்து, தங்கள் தெய்வங்களை அவைகள் திருப்திபடுத்த முடியும் என்று நம்புகின்றனர்.

ஆனால், மனிதன் கிறிஸ்துவின் மீது வைக்கும் நம்பிக்கை, விசுவாசம் மட்டுமே மனிதனை இரட்சிக்கும் என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது. இரட்சிப்பின் வெளிப்பாடுதான் ஞானஸ்நானம்.

ஞானஸ்நானம் பெறாதவர்களை, அதுவும் மூழ்கி ஞானஸ்நானம் பெறாதவர்களை, விசுவாசிகள் என்று ஒரு சிலர் அங்கீகரிப்பதில்லை. இரட்சிப்புக்கு ஞானஸ்தானம் அவசியம் என்று கூறுவதுடன் அதற்கு ஆதாரமாக மாற்கு 16:16,  யோவான் 3:5 ஆகிய வசனங்களை பயன்படுத்துவதும் உண்டு.

இவ்வசனங்களில் ஒரு வார்த்தையை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளாமல், அவ்வதிகாரம், அவ்வாக்கியம், கூறப்பட்டிருக்கும் சூழலையும் நன்கு கவனிப்போமானால் சரியான புரிந்துகொள்ளுதல் கிடைக்கும்.
ஞானஸ்தானம் ஒரு மனிதனுக்கு இரட்சிப்பை கொடுக்குமானால், இரட்சிப்பு கிருபையினால் அல்ல கிரியையினால் என்று வருமல்லவா?

இதுமட்டுமல்லாமல் மரணப்படுக்கையில் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்பவர்களும் பரலோக வாசலில் நுழைகிறார்கள் என்பதை "இன்று என்னோடு கூட நீ பரதீசிலிருப்பாய்" என்று இரட்சிக்கப்பட்ட குற்றவாளியிடம் இயேசுநாதர் கூறுவதிலிருந்து அறியமுடிகிறது.

ஆகவே, ஞானஸ்நானம் மட்டும் பரலோகத்திற்கான வழி அல்ல. இயேசு கிறிஸ்துவே வழி. இவ்வுலகில் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் ஞானஸ்நான சடங்குகளை தொடர்ந்து சாட்சியாய் வாழுதல் அவசியம்.

அது நம் இரட்சிப்பின் வெளிப்பாடாகவும், அவ்வெளிப்பாடு "நான் கிறிஸ்துவின் சாட்சி" என்று கூறும் நாளாகவும் இருக்க வேண்டும்.

அது பாரம்பரிய சடங்காக அல்ல கிறிஸ்துவின் பாடுகளின் பங்காக இருத்தல் வேண்டும்.

ஞானஸ்நானத்தன்று போதகர் கேட்ட கேள்விகளுக்கான பிரதியுத்தரங்களை மனதில் பதித்து, இயேசுவின் சாட்சிகளாக வாழ்வதும் அநேகரை நித்திய ஜீவன்பெற்று வாழ வைப்பதும் இவ்வுலகின் விசுவாசிகளின் கடமை.

ஆமென்