ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்த ரணில், கூட்டமைப்பு, சஜித், மனோ உட்பட மேலும் பலர்

Nila
2 years ago
ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்த ரணில், கூட்டமைப்பு, சஜித், மனோ உட்பட மேலும் பலர்

காபந்து அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.

இன்று காலை ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட இந்த அழைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கி புதிய பிரதமரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவொரு உடன்படிக்கையும் செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை நொடிப்பொழுதினில் தூக்கி எறிவதே இப்போது நாம் செய்ய வேண்டிய ஒன்று என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நாடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தில் இணையமாட்டோம் நாம் இணைய மாட்டோமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை மக்களின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார மேலும் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) ஆகிய கட்சிகள் எந்தவொரு சர்வகட்சி, இடைக்கால அல்லது தேசிய அரசாங்கப் பொறிமுறைகளிலும் பங்குபற்றப் போவதில்லையென தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தம்முடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளது.