புத்தாண்டிற்காக இன்று முதல் 296 பஸ்கள் விசேட சேவையில்.....

#SriLanka #Travel #Province
புத்தாண்டிற்காக இன்று முதல் 296 பஸ்கள் விசேட சேவையில்.....

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தலைநகர் கொழும்பிலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை கொழும்பிலிருந்து செல்வதற்கும் , 17 ஆம் திகதியிலிருந்து மீண்டும் கொழும்பிற்கு வருவதற்கும் வழமையை விட மேலதிக பஸ்களும் , புகையிரதங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துசபை தெரிவித்துள்ளது

கொழும்பு கோட்டையிலிருந்து எல்ல வரை 13 , மட்டக்களப்பு வரை 15 , பெலியத்தை வரை 8, புத்தளம் வரை 4 என புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

கொழும்பிலிருந்து செல்வதற்கு இன்று முதல் கொழும்பிலிருந்து 172 பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதனை நாளுக்கு நாள் அதிகரித்து 12 ஆம் திகதியாகும் போது 296 பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மேல் மாகாணத்திற்கூடான பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் கொழும்பிலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் செல்வதற்கு பிரதான வீதிகளிலும் , அதிவேக வீதிகளிலும் 578 பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதே போன்று கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி, நானோயா, பதுளை, தெமோதர மற்றும் எல்ல வரை 13 சந்தர்ப்பங்களிலும் , வடக்கு நோக்கி குருணாகல், கனேவத்த, மஹவ, அநுராதபுரம், காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்பு வரை 15 சந்தர்ப்பங்களிலும் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

மேலும் 12, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் 5 புகையிரதங்கள் மாத்திரம் காலி, மாத்தறை, பெலியத்த ஆகிய பகுதிகளுக்கு 8 சந்தர்ப்பங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.