மின்வெட்டு தொடர்பான பொது பயன்பாடுகள் ஆணைக் குழுவின் மனு தள்ளுபடி

#SriLanka #Court Order #Power
மின்வெட்டு தொடர்பான பொது பயன்பாடுகள் ஆணைக் குழுவின் மனு தள்ளுபடி

மின்வெட்டை தவிர்ப்பதற்கு போதுமான எரிபொருளை பெற்றுக்கொடுக்க எரிசக்தி அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில்  தாக்கல்  செய்த அடிப்படை உரிமை மனு  நேற்று (8)  விசாரணைக்கு ஏற்காது  தள்ளுபடி  செய்யப்பட்டது.

தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியாமையினால், பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தீர்ப்பளிக்குமாறு கோரப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நேற்றும் பரிசீலிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு  தள்ளுபடி செய்யபப்டுவதாக அறிவிக்கப்பட்டது.

நீதியரசர் காமினி அமரசேகர தலைமையிலான நீதியரசர்களான ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் மஹிந்த  சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

நிதி அமைச்சு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நாணய சபை, மத்திய வங்கியின் ஆளுநர், மின்சார சபை, அரசாங்க நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்களும் இந்த மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

மின்வெட்டினை தவிர்ப்பதற்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக 200 மில்லியன் டொலர்களை ஒதுக்குமாறு நிதி அமைச்சர், திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோருக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தற்போதைய நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு 2016 ஆம் ஆண்டு முதல் அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு பலமுறை கடிதங்களை அனுப்பி வைத்துள்ள போதிலும் அது தொடர்பில் எந்த நிறுவனமும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, அதுவே தற்போதைய நெருக்கடிக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் மனுவில்  சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மின் உற்பத்தியை துரிதமாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தாம் அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாகவும், 2015 ஆம் ஆண்டின் பின்னர் பாரிய மின்னுற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையெனவும் ஆணைக்குழு  மனுவூடாக குறிப்பிட்டிருந்தது.

சட்டத்தரணி யொஹான் குரே, நிரஞ்சன் அருள் பிரகாசம், சமித் சேனாநாயக்க, ஹர்ஷ பெர்னாண்டோ மற்றும் சட்டத்தரணி  ஜி.ஜி. அருள்பிரகாசம் ஆகியோர் மனுதாரர்களுக்காக மன்றில் ஆஜராகி வாதங்களை முன் வைத்திருந்தனர்.  சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.