வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு: சந்தேக நபர் கைது

Prathees
2 years ago
வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு:  சந்தேக நபர் கைது

அதிக விலைக்கு விற்பனைக்காக வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், எரிவாயு சிலிண்டர்களை மறைத்து வைத்திருந்த வீட்டின் உரிமையாளரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாகவும் கினிகத்தேன பொலிஸ் பொறுப்பதிகாரி விராஜ் விதானகே தெரிவித்தார்.

கினிகத்தேனை அம்பகமுவ புனித காலனியில் உள்ள வீடொன்றில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நுவரெலியா நுகர்வோர் அதிகார சபையின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையில் 12.5 கிலோ எடையுள்ள 177 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 28, 2.4 கிலோ எடையுள்ள 25 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாவலப்பிட்டி - கம்பளை பிரதான வீதியில் உள்ள லிட்ரோ காஸ் நிறுவனத்தின் நாவலப்பிட்டி விற்பனையாளருக்கு வழங்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படாமல்  வீட்டில் மறைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நுவரெலியா நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்தார்.

சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதுடன், நீதவானின் உத்தரவின் பேரில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்களுக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என கினிகத்தேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.