புதிய அமைச்சரவையில் மூத்தவர்களுக்கும் பெண்களுக்கும் இடமளிக்கவில்லை!

Mayoorikka
2 years ago
புதிய அமைச்சரவையில் மூத்தவர்களுக்கும் பெண்களுக்கும் இடமளிக்கவில்லை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிவந்த முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை.

சமீபத்தில் 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றிருந்த நிலையில், நெடுஞ்சாலைகள் அமைச்சராக பொறுப்பேற்ற ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தற்போது அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும், மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன ஆகியோருக்கும் எவ்விதமான அமைச்சுப் பொறுப்புக்களும் வழங்கப்படவில்லை.

முன்னாள் அமைச்சர்களான கெஹேலிய ரம்புக்வெல்ல, சரத் வீரசேகர, காமினி லொக்குகே, டலஸ் அழகப்பெரும, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை.
 
நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ஷ மற்றும் சஷீந்திர ராஜபக்ஷ போன்ற ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களும் புதிய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் எந்தவொரு பெண் பிரதிநிதிக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை.

முன்னைய அமைச்சரவையில் பவித்ரா வன்னியாராச்சிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருந்தது.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, சீதா அரம்பேபொல, கீதா குமாரசிங்க, கோகிலா குணவர்தன, முதித பிரிஷாந்தி, ராஜிகா விக்கிரமசிங்க, மஞ்சுளா திசாநாயக்க, மற்றும் டயனா கமகே ஆகியோர் ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

 இவ்வாறு, நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பல பெண் எம்.பி.க்கள் இருந்தும், புதிய அமைச்சரவையின் கீழ் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.