IMF உடன் பேச்சுவார்த்தைக்கு முன் இலங்கையில் அரசியல் தீர்வு அவசியம்! ஹர்ஷ டி சில்வா

Mayoorikka
2 years ago
IMF உடன் பேச்சுவார்த்தைக்கு முன் இலங்கையில்  அரசியல் தீர்வு அவசியம்! ஹர்ஷ டி சில்வா

அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தாலும் கூட, அதில் தீர்மானம் ஒன்றை எட்ட முன்னர், இலங்கையில் அரசியல் தீர்வொன்று பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது“ என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 

“இலங்கையில் ஸ்திரமான அரசாங்கம் உருவாக்கப்படும் வரையில், சர்வதேசத்தின் எந்தவொரு ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாது“ எனவும் அவர் கூறியுள்ளார். 

“சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தாலும் கூட, நாளைக்கே அவர்கள் நிதி உதவிகளை பெற்றுக்கொடுக்கப்போவதில்லை. அதற்கு குறைந்தபட்சம் ஒன்பது மாத காலமாவது பெற்றுக்கொள்ளப்படும். அதுவரையில் நிலைமைகளை சமாளிக்க அரசாங்கத்தினால் எவ்வாறான வேலைத்திட்டங்களை கையாள முடியும் என்பதே தற்போதுள்ள கேள்வியாகும்“ என குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் அரசாங்கத்திடம் எடுத்துக்கூறி வருகின்றோம். சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டியதன் அவசியம் குறித்தும் நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்துள்ளோம். அப்போதெல்லாம் ஜனாதிபதி எமது கருத்துக்களை கேட்கவில்லை. இப்போதாவது ஜனாதிபதி முன்வந்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்“ எனவும் கூறியுள்ளார். 

“நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதி பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்கத்தின் தீர்வுத்திட்டம் என்ன என்பதையாவது ஜனாதிபதி முன்வைக்க வேண்டும். பிரச்சினைகளுக்கு அஞ்சி கேள்விகளுக்கு பதில் தெரிவிக்காது ஓடி ஒளிந்துகொள்வதால் தீர்வுகள் கிடைக்கப்போவதில்லை“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.