தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 79

#history #Article #Tamil People
தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 79

பல்லவர்-களப்பிரர்: சங்கத்து இறுதிக் காலத்தில் வேங்கடத்திற்கு அப்பாற்பட்ட நிலப்பகுதியைக் கங்கையாறுவரை சாதவாஹனர் என்னும் ஆந்திர நாட்டு மன்னர் ஆண்டு வந்தனர்.

அவர்கட்கடங்கித் தென் பகுதியை ஆண்ட மரபினர் பல்லவர் என்பவர். இப்பல்லவர் சாதவாஹனப் பேரரசு வீழ்ச்சியுற்றதும் கிருஷ்ணையாறு முதல் பெண்ணையாறு வரைப்பட்ட நாட்டிற்குத் தாமே உரிமையாளர் ஆயினர்; ஆகித் தெற்கே இருந்த அருவா வடதலைநாடு, அருவா நாடுகளைக் கைப்பற்ற முனைந்தனர்.

அப்பொழுது அருவா வடதலை நாட்டில் கடப்பைவரை இருந்த பெருங்காட்டுப்பகுதிகளில் வாழ்ந்து வந்த களவர் என்னும் வீரமரபினர் பல்லவர் படையெடுப்பால் நெருக்குண்டனர்; நெருக்குண்டு தம் நாட்டில் இருக்க முடியாராய் அருவா நாட்டினுட் புகுந்தனர். இங்ஙனம் இக்குழப்பம் ஏற்பட்ட காலம் ஏறத்தாழக் கி.பி.300 என்னலாம். களவரை விரட்டி அருவாவடதலை நாட்டைக் கைப்பற்றிய பல்லவர்,

மேலும் அவருடன் பொருது பாலாற்றுக்குத் தெற்கே அவரை விரட்டி; ஏறத்தாழக் கி.பி. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தைக் கோநகராகக் கொண்டு தொண்டை நாட்டின் வடபகுதியை ஆளலாயினர். இங்ஙனம் ஆண்ட முதற்பல்லவ வேந்தன் சிவ ஸ்கந்தவர்மன் என்பவன்.[1]

களப்பிரர்-சோழர்-பாண்டியர்: சிவ ஸ்கந்தவர்மனால் தோற்கடிக்கப்பட்ட களப்பிரர் வேறு வழியின்றிப் பாலாற்றின் தெற்குமுதல் காவிரியாறு வரை பரவினர்; பின்னர்ச் சோணாட்டின் உட்பகுதியிலும் புகுந்தனர்; சோழர் அரசு நிலை குலைந்தது. களப்பிரர் சோணாட்டுடன் நின்று விடாது, பாண்டிய நாட்டிலும் புகுந்து பாண்டியனை ஒடச் செய்தனர்.

இங்ஙனம் சோழ பாண்டியர் தம் அரசிழந்தகாலம் ஏறத்தாழக் கி.பி. 350-450 எனக் கொள்ளலாம். இங்ஙனம் முடியிழந்த பாண்டிய நாடு, ஏறத்தாழ கி.மு. 590-இல் பாண்டிய அரசனான கடுங்கோனால்நிலைபெற்றது. அதுமுதல் வன்மைமிக்க பாண்டிய மன்னர் பல்லவப் பேரரசரையே எதிர்க்கத் தக்க பேராற்றல் பெற்றனர். ஆதலின், களப்பிரர் வன்மை குன்றிப் பாண்டியரிடம் சிற்றரசராயினர்.

சோணாட்டில் இருந்த களப்பிரர் ஏறத்தாழக் கி.பி. 575 வரை பேரரசராக இருந்தனர்; பின்னர் சிம்மவிஷ்ணு என்ற பல்லவனால் முற்றிலும் முறியடிக்கப்பட்டனர்; சோழ அரசை இழந்தனர்; தஞ்சை, வல்லம், செந்தலை, புதுக்கோட்டை முதலிய இடங்களில் சிற்றரசர் ஆயினர். வலுத்தவர் பக்கம் சேர்ந்து காலத்திற்கு ஏற்றாற்போல நடந்து வந்தனர்.

களப்பிரர் ஆட்சியினின்றும் பாண்டியர் விடுதலை பெற்றாற்போலச் சோழர் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் விடுதலை பெறக்கூடவில்லை. ஏன் எனில், அக்களப்பிரரினும் வன்மை மிக்க பல்லவர் களப்பிரரை அடக்கி நாட்டைக் கவர்ந்து கொண்டமையின் என்க. இங்ஙனம் நாட்டைக் கவர்ந்த பல்லவர் கி.பி. 875 வரை சோழ நாட்டை விட்டிலர்.

ஆதலின், சோழர் ஏறத்தாழக் கி.பி. 350 முதல் முடி இழந்து வாழ வேண்டியவர் ஆயினர் என்பது கவனித்தற்கு உரியது.[2] இனி, இந்த இருண்டகாலத்தில் சோழரைப் பற்றிய செய்திகள் குறிக்கும் சான்றுகளைக் காண்போம்.

புத்ததத்தா: இவர் ஒரு பெளத்த சமயப் பெரியார். இவர் 'அபிதர்மாவதாரம்’ என்னும் நூலைச் சோழநாட்டில் இருந்து எழுதியவர். இவர், “காவிரிப்பூம்பட்டினம் செல்வ வணிகரைக் கொண்டது; மாட மாளிகைகள் நிரம்பியது; இனிய பல பூஞ்சோலைகளை உடையது; அரண்மனைகளை உடையது; கண்டதாசன் கட்டிய புத்த விஹாரத்தில் நான் இருந்து, என் மாணவி சுமதியின் வேண்டுகோளால் இந்நூலை எழுதினேன்[3]" என்று மேற்சொன்ன தமது நூலின் ஈற்றிற் குறித்துள்ளார்.

அவரே தமது விநயவிநிச்சியம்' என்னும் நூலின் இறுதியில், "இந்நூல் புத்த சீடர்களால் வரையப்பட்டது. நான் சோணாட்டில் உள்ள பூதமங்கலத்தில்[4] வேணுதாச விஹாரத்தில் தங்கி இருந்தபொழுது இதனை எழுதினேன். அச்சுத விக்கந்தன் என்னும் களப்பிர மரபரசன் உலகத்தை ஆண்ட பொழுது இந்நூலைத் தொடங்கி எழுதி முடித்தேன்[5]" என்று கூறியுள்ளார். இவர் காலம் ஏறத்தாழக் கி.பி. 450 ஆகும்.[6]

களப்பிரரும் பெளத்தரும்: அச்சுதன் என்னும் களப்பிர அரசன் மூவேந்தரையும் விலங்கிட்டு வைத்ததாக 'தமிழ் நாவலர் சரிதை கூறுகின்றது. கி.பி. 10-ஆம் நூற்றாண்டினரான அமிதசாகரர் என்னும் பெளத்தர் இந்த அச்சதனைப்பற்றிய சில பாக்களைக் குறித்துள்ளார். இக்குறிப்பாலும், புத்த தத்தர் இவனைக் குறித்திருப்பதாலும் இவன் பெளத்தனாக இருந்திருக்கலாம் எனக் கோடலில் தவறில்லை.

இவன் 'உலகத்தை ஆண்டான்' எனப் புத்ததத்தர் கூறலால், அச்சுதன் சோழ-பாண்டிய நாடுகளை ஆண்டனன் என்று கொள்ளலாம். இவன் காலத்தவரே பெரிய புராணம் கூறும் மூர்த்தி நாயனார். இவன் பெளத்தனாக இருந்ததாற்றான் சைவத்திற்குப் பெரும் பகைவனாக இருந்தான் போலும்!

“களப்பிரர் இடையீடு. அப்பொழுது பேரரசரும் சார்வபெளமரும் ஆண்டு மறைந்தனர். பின்னர்க் கடுங்கோன் களப்பிரரை விரட்டிப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான்” என்று வேள்விக்குடிப்பட்டயம் எடுத்து இயம்புகின்றது. இக்களப்பிரர், வழிவழியாக வந்த பிரம்மதேயத்தை அழித்தனர். அதனைக் கோச்சடையன் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் புதுப்பித்தான். இச்செயலைக் கொண்டும் களப்பிரர் தொடக்கத்தில் பெளத்தராகவும் சமணராகவும் இருந்தனர் எனக் கோடலில் தவறில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!