பிரதமர் பதவியை ஏற்பதற்கு ரணில் தயாராக இருக்கின்றார்: ருவான் விஜேவர்தன தகவல்

Mayoorikka
2 years ago
பிரதமர் பதவியை ஏற்பதற்கு ரணில் தயாராக இருக்கின்றார்:  ருவான் விஜேவர்தன தகவல்

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்களை நீக்கி விட்டு, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்தால், அதன் பிரதமர் பதவியை பெற முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அப்படியான பதவியை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொள்ளாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடத்திய செயலாளர் சந்திப்பில் ருவான் விஜேவர்தன இதனை கூறியுள்ளார். “ தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஐக்கிய தேசியக் கட்சி தயாரில்லை.

அத்துடன் தற்போது தேர்தல் ஒன்றுக்கு செல்வதும் பொருத்தமற்றது. இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதால், நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. தற்போது நாட்டுக்கு இடைக்கால அரசாங்கம் ஒன்று தேவைப்படுகிறது.

இந்த இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக மக்களுக்கு தேவையான உடனடியான நிவாரணங்களை வழங்கி, அதன் பின்னர் தேர்தலுக்கு செல்வது பொருத்தமானதாக இருக்கும்.

அப்படியான இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டால், ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை பெற தயாராக இருக்கின்றார்.

எனினும் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு அதீதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும் போது, பிரதமர் பதவியை பெறுப்பேற்பதில் அர்த்தமில்லை” எனவும் ருவான் விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.