தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 80

#history #Article #Tamil People
தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 80

சோழர் வரலாறு - சோழர் எழுச்சி


விசயாலய சோழன் - ஆதித்த சோழன்
(கி.பி. 850 - 970)

திருப்புறம்பியப் போர்: விசயாலய சோழன் கி.பி. 850-இல் உறையூர் அரசு கட்டில் ஏறினான். அவன் தன் முன்னோரைப் போலப் பல்லவர்க்கு அடங்கியவனாகவே இருந்தான். அக்காலத்தில் பல்லவப் பேரரசனான மூன்றாம் நந்திவர்மன் தன் நாட்டைச் சிறிது சிறிதாக வென்று தெள்ளாறுவரை வந்துவிட்ட பாண்டியன் வரகுணனையும் சோழரையும் பிறரையும் தெள்ளாற்றுப் போரில் முற்றும் முறியடித்தான்.

இப்போரில் விசயாலயன் அல்லது அவனுக்கு முற்பட்ட சோழ மன்னன் பாண்டியனோடு சேர்ந்திருந்தனன். பிறகு பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் குடமூக்கில் போர் நடந்தது. அப்போரில் முதலாம் வரகுணன் மகனான பூனிமாறன் பூர்வல்லவன் வெற்றிபெற்றான். பிறகு அரிசிலாற்றங் கரையில் நந்திவர்மன் மகனான நிருபதுங்க பல்லவன் பூரீமாறன் படைகளை வெற்றி கொண்டான். பூரீமாறனுக்குப் பின் கி.பி. 862-இல் அவன் மகனான இரண்டாம் வரகுணன் பல்லவர் மீது போர் தொடுத்தான்.

அப்பொழுது அபராசிதவர்மன் என்னும் பல்லவன், தன் பாட்டனான கங்க அரசன் பிருதிவீபதியோடு வந்து கடும்போர் செய்தான். அப்போரில் விசயாலயன் பல்லவன் பக்கமாக நின்று போரிட்டான். தஞ்சையை ஆண்ட முத்தரையர் (களப்பிரர் மரபினர்) பாண்டியன் பக்கம் நின்று போரிட்டனர். போரில் பிருதிவீபதி தோற்றான்; ஆயினும், பாண்டியன் தோற்றோடினான். அபராசிதன் வெற்றி பெற்றான். அதனால், அவனுடன் சேர்ந்திருந்த விசயாலய சோழன் முத்தரையருடைய தஞ்சையைக் கைப்பற்றிக் கொண்டான்.

திருப்புறம்பியப் போரில் பெரும் பங்கு கொண்ட விசயாலயன் மகனான ஆதித்த சோழன் சோழ நாட்டின் ஒரு பகுதிக்கு உரியவன் ஆனான். திருப்புறம்பியப் போர் ஏறக்குறைய கி.பி. 880-இல் நடந்ததென்னலாம்.[1]

இப்போரின் சிறப்பு:

இப்போர் தமிழக வரலாற்றில் பெரிய மாறுதல்களைச் செய்து விட்டது. இப்போரில் தோற்ற பாண்டிய நாடு மீண்டும் உயிர்ச்சி பெற வழி இல்லாது போயிற்று. இதற்கு முன் தெள்ளாறு, அரசிலாறு முதலிய இடங்களில் ஏற்பட்ட படு தோல்விகளும் இத்தோல்வியுடன் ஒன்றுபடப் பாண்டியர் பலரது மதிப்பும் குறைந்தன.

இவை ஒன்று சேர்ந்து பாண்டியர் பேரரசின் உயிர் நாடியைச் சிதறடித்துவிட்டது. பல்லவர் நிலைமை என்ன? ஒயாது மேலைச் சாளுக்கியருடனும் பிறகு இராட்டிரகூடருடனும் வடக்கில் போர்கள் நடந்த வண்ணம் இருந்தமையாலும், தெற்கில் முதலாம் வரகுணன் காலமுதல் மூன்று தலைமுறை ஒயாப் போர்கள் நடந்து வந்தமையாலும் பல்லவர் பேரரசு ஆட்டங்கொண்டது. பல்லவப் பேரரசின் வடபகுதியை இராட்டிரகூடர் கைப்பற்றிக் கொண்டனர், தென் பகுதியை, புதிதாக எழுச்சிபெற்ற ஆதித்த சோழன் பையப்பையக் கவரலானான். இது நிற்க.

விசயாலய சோழன் (கி.பி. 850 - 880);

இவனே, இந்தியப் பேரரசுகளில் ஒன்றாகக் கருதத்தக்க பிற்காலச் சோழர் பேரரசைத் தோற்றுவித்த முதல்வன். இவன் முத்தரையரை வென்று தஞ்சாவூரைக் கைக்கொண்டான்; அங்குத் துர்க்கைக்குக் கோவில் கட்டினான் என்று திருவாலங் காட்டுச் செப்பேடுகள் செப்புகின்றன.[2] (1) திருச்சிராப் பள்ளிக் கல்வெட்டொன்று ‘விசயாலயன் தன் பெயர்க் கொண்ட விசயாலயச் சதுர்வேதி மங்கலம்’ என்னும் சிற்றுரைப் பிரம்மதேயமாக விட்டான்” என்று கூறுகிறது.

வடஆர்க்காடு கோட்டத்தில் உள்ள கீழ்ப்புத்துரரில் இவனது நான்காம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று இருந்ததென்பது பிற்கால விக்கிரம சோழன் கல்வெட்டால் தெரியவருகிறது.[3] அதனால், இவனது ஆட்சி தொண்டை நாட்டின் ஒரு பகுதி வரை பரவியிருந்தது எனலாம். ஆயினும் இவ்வரசன் பல்லவ வேந்தனுக்கு அடங்கி இருந்தவன்; எனினும், தன் ஆட்சியாண்டைக் குறிக்கும் உரிமை பெற்றிருந்தான்.

ஆதித்த சோழன் (கி.பி. 880 - 907) .

இவனது 24ஆம் ஆட்சியாண்டின் கல்வெட்டுக் கிடைத்திருப்பதால், இவன் 24 ஆண்டுகள் அரசாண்டான் என உறுதியாக உரைக் கலாம். இவன் முன்சொன்ன திருப்புறம்பியப் போரினால் மேலுக்கு வந்தவன். இவன் அபராசிதவர்மனைப் போரில் முறியடித்துத் தொண்டை நாட்டைக் கைப்பற்றினான்’ என்று திரு ஆலங்காட்டுப் பட்டயம் பகர்கின்றது. “பெரிய யானைமீது இருந்த அபராசிதவர்மன்மீது ஆதித்தசோழன் பாய்ந்து அவனைக் கொன்றான்;

கோதண்டராமன் என்னும் பெயர் பெற்றான்” என்று கன்னியாகுமரிக் கல்வெட்டுக் கூறுகின்றது.[4] இவற்றால், ஆதித்த சோழன் அபராசிதனைத் தருணம் பார்த்து வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினான் என்பது தெரிகிறது. இந்தக் காலம் ஏறக் குறைய கி.பி. 890 எனக் கொள்ளலாம்.

ஆதித்தனும் கங்க அரசனும்: கங்க அரசனான பிருதிவீபதி திருப்புறம்பியப் போரில் ஆதித்தனுடன் இருந்து போரிட்டு இறந்தவன். அவன் மகனான பிருதிவீபதியார் என்பவன் ஆதித்த சோழனது உயர்வை ஒப்புக் கொண்டு நண்பன் ஆனான். அவன் இராசகேசரி ஆதித்த சோழனது 24ஆம் ஆட்சி ஆண்டில் தக்கோலப் பெருமானுக்கு வெள்ளிக் கெண்டி ஒன்றை அளித்ததைக் குறிக்கும் கல்வெட்டில், ஆதித்த சோழன் உயர்வைக் குறித்துள்ளான்.[5]

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!