தமிழ் மன்னர் சோழர் வரலாறு. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 83
சோழர் வரலாறு - முதலாம் இராசராசன்
முதலாம் இராசராசன்
(கி.பி. 985 - 1014)
இராசராசன் பிறந்த நாள்: சுந்தரசோழனாகிய இரண்டாம் பராந்தகனுக்கும் வானவன் மாதேவிக்கும் பிறந்தவன் இராச கேசரி முதலாம் இராசராசன். இவன் கி.பி. 985 சூன் திங்கள் 25-ஆம் நாள் அரசு கட்டில் ஏறினான்,[1] தஞ்சை இராசராசேச்சரத்தில் ‘உடையார் இராசராச தேவர் திருச்சதயத் திருவிழா’ எனவும், திருவையாற்று உலோகமாதேவீச்சரத்தில் ‘உடையார் திங்கள் சதய விழா’ எனவும், செங்கற்பட்டுத் திருவிடந்தை வராகப் பெருமான் கோவிலில், யாண்டுதோறும் ஆவணித் திங்கள் சதயநாள் தொட்டு, ‘இராசராசன் திருவிழா’ என ஏழுநாள் நடந்தது எனவும், வரும் கல்வெட்டுகளை நோக்க, இவன் பிறந்த நாள் சதயநாள் என்பது தெரிகிறது.
சேரநாட்டுத் திருநந்திக் கரை என்னும் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்குத் தன் பிறந்த நாளாகிய ஐப்பசி மாதச் சதயநாளில் திருவிழா நடத்தற்காக ‘முட்டம்’ என்னும் ஊரை அளித்தனன் என்பதை அங்குள்ள கல்வெட்டு அறிவித்தலால், இராசராசன் ஐப்பசித் திங்கள் சதயநாளிற் பிறந்தவன் என்பது தெளிவாகிது.இப்பெருமான் பிறப்பைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அழகாகச் சிறப்பித்துள்ளன.
இவனது சிறப்பு: விசயாலயற்குப் பின் வந்த சோழர்களிற் சோழப் பேரரசை நன்கனம் அமைத்து நிலைபெறச் செய்த பேரரசன் இராசராசனே ஆவன். இவன் உண்டாக்கிய பேரரசு ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் நிலையுற்றிருந்தது எனின், இவன் இட்ட அடிப்படை எவ்வளவு உறுதி வாய்ந்ததாக இருந்திருத்தல் வேண்டும்!
இராசராசன் தன் தந்தையிடத்தும் பிறகு சிற்றப்பனிடத்தும் இருந்து அரசியல் அமைப்புகளை அழகுற அறிந்திருந்தான்; தான் பட்டம் ஏற்ற பிறகு இன்னின்ன வேலைகளைச் செய்து சோழப் பேரரசை உண்டாக்குதல் வேண்டும் என்று முன்னமே திட்டம் செய்திருந்தான்; பட்டம் பெற்ற பின்னர் அத்திட்டத்தைச் செவ்வனே நிறைவேற்றி வெற்றி கண்டவன். இவனது ஆட்சிக் காலத்திலேயே இவன் தன் மைந்தனான இராசேந்திரனைப் பெரு வீரனாக்கிவிட்டமை பாராட்டற்பாலது. அதனாலன்றோ, அப்பெருமான் கடற்படை செலுத்திக் கடாரம் கைக்கொண்டான்! இராசராசன் ஆண்ட காலமே சோழர் வரலாற்றில் ‘பொற்காலம்’ என்னலாம்.
இவனது ஆட்சியில் ஒவியம், சிற்பம், நாடகம், நடனம், இசை, இலக்கியம் இன்ன பிறவும்நன்குவளரத் தலைப்பட்டன, இவன் காலத்திற்றான் தேவாரத் திருமுறைகள் நாடெங்கும் பரவின, சைவ சமய வெள்ளம் நாடெங்கும் பரந்து மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. சோழப் பேரரசை உண்டாக்கப் பெரும்படை திரட்டியவன் இராசராசனே ஆவன்; அப்படை இவன் நினைத்தன யாவும் தடையின்றிச் செய்துவந்தது பாராட்டற்பாலது. அரசியல் அமைப்பைத் திடமாக அமைத்தவனும் இராசராசனே ஆவன்.
நாகரிகம் மிகுந்த இக்கால அரசியல் அமைப்பிற்கும் இராசராசன் அரசியல் அமைப்பிற்கும் எள்ளளவும் வேறுபாடில்லை. இராட்டிரகூடர் படையெடுப்பால் துன்புற்ற சோழநாடு இராசராசன் காலத்தில் கிருஷ்ணையாறுவரை பரவியது; மேற்கே அரபிக்கடல் வரை பரவியது; தெற்கே இலங்கை வரை பரவியது எனின் இராசராசன் போர்த்திறனை என்னெனப் புகழ்வது! இப்பெருவேலையைச் செய்ய இவனுக்கு இருந்த சாதனங்களைவிடப் பெருமை பெற்றது இவனது திருவுருவமே என்னல் மிகையாமோ?
இவனது திருவுருவம் கண்டவர் உள்ளத்தை ஆர்க்கத்தக்கதாக இருந்திருத்தல் வேண்டும். இவனுடைய திருவுருவமும் கோப்பெருந்தேவியின் திருவுருவமும் சிலை வடிவில் திருவிசலூர்க்கோவிலில் இருக்கின்றன. சுருங்கக் கூறின், இராசராசன் அரசியலிற் பண்பட்ட அறிவுடையவன்; சிறந்த போர்த்தொழிலில் வல்லவன்; சிறந்த சமயப்பற்று உடையவன்; பேரரசை உண்டாக்கும் தகுதி முற்றும் பொருந்தப் பெற்றவன் எனலாம். சோழர் வரலாற்றை இன்று நாம் அறிந்து இன்புற வழிவகுத்தவன் இப்பேரறிஞனே ஆவன். எப்படி?
மெய்க்கீர்த்தி : ‘இச்சோழற்கு முற்பட்ட பல்லவர், பாண்டியர் பட்டயங்களும் கல்வெட்டுகளும் பல கிடைத்துள்ளன. அவற்றில் அரசமரபு கூறப்பட்டிருக்கும். அந்தந்த அரசன் சிறப்புச் சிறிதளவே கூறப்பட்டிருக்கும்; முற்றும் கூறப்பட்டிராது: விளக்கமாகவும் குறிக்கப்பட்டிராது. இம்முறையையே விசயாலயன் வழி வந்தவரும் பின்பற்றி வந்தனர். ஆனால், இராசாசன் இந்த முறையை அடியோடு மாற்றிவிட்டான்;
தனது ஆட்சியாண்டுகளில் முறையே நடைபெற்ற போர்ச் செயல்களை முறையே வெளிவந்த கல்வெட்டுகளில் முறைப்படி குறித்து வரலானான். சான்றாக ஒன்று கூறுவோம்: இராசராசன் முதலில் காந்தளூர்ச் சாலையில் கலம் அறுத்தான். இந்த வெற்றியே இவன் கல்வெட்டுகளில் முதல் இடம் பெற்றது. இதன் பின்னர்ச் செய்த போர் இரண்டாம் இடம்பெற்றது. இப்படியே ஒன்றன்பின் ஒன்றாக முறைப்படி குறிக்கப் பட்டன. இங்ஙணம் இப்பெரியோன் ஒழுங்குபெறக் குறித்தவையே பிற்கால அரசராலும் பின்பற்றப்பட்டன. அக்குறிப்புகளே இன்று சோழர் வரலாற்றுக்கு உறுதுணை செய்கின்றன. பட்டயம் அல்லது கல்வெட்டுக்குத் தொடக்கமாக ஒரு தொடரை அழகாக அமைத்தவனும் இராசராசனே ஆவன். ‘இஃது இவனது பட்டயம் அல்லது கல்வெட்டு’ என்று எளிதில் கூறிவிடத் தக்கவாறு அத் தொடக்கம் இருக்கிறது.
அது ‘திருமகள் போல...’ என்பதாகும். இவனது வீரமகனான இராசேந்திரன் கல்வெட்டும் பட்டயமும் வேறு தொடக்கம் உடையவை. இங்ஙனமே பின்வந்தார் பட்டயங்களும் கல்வெட்டுகளும் வேறுவேறு தொடக்கம் கொண்டவை. இத்தகைய ஒழுங்கு முறையை அமைத்த இப்பேரரசனின் அறிவாற்றலை என்னெனப் பாராட்டுவது!
சுற்றுப்புற நாடுகள்: இராசராசன் பட்டம் பெற்ற காலத்தில் சோழ அரசு வடக்கில் தொண்டைநாடுவரையும் தெற்கில் பாண்டியநாட்டு வட எல்லை வரையுமே பரவி இருந்தது. எனவே, வடக்கே கீழைச் சாளுக்கியர் ஆட்சி நெல்லூர் வரை பரவியிருந்தது; தெற்கே பாண்டியநாடு தனித்து இருந்தது; மேற்கே சேர நாடு கங்கநாடு, குடகு, நுளம்பபாடி, தடிகைபாடி, மேல் கடற்கரை நாடு முதலியன தனித்தனிச்சிற்றரசுகளாக இருந்தன. வடமேற்கே இராட்டிரகூடரை அழித்துப் புதிய பேரரசை இரட்டபாடியில் அமைத்த மேலைச் சாளுக்கியர் ஆண்டு வந்தனர். இலங்கையில் ஐந்தாம் மகிந்தன் ஆண்டுவந்தான்.
சேர பாண்டியருடன் போர் : இராசராசன் பட்டம் பெற்ற ஆண்டு கி.பி. 985, இவன் சேர நாட்டிற் படையெடுத்த ஆண்டு கி.பி.989.எனவே இவன் ஏறத்தாழ நான்காண்டுகள், தன் படையைப் பெருக்குவதிற் செலவழித்தான் எனலாம். சேர நாட்டின்மீது சென்ற படைக்குத் தலைமை பூண்டவன், பஞ்சவன்மாராயன் என்னும் பெயர்கொண்ட இராசேந்திர சோழனே ஆவன். மலைநாடு, அடைதற்கு அரியதாய் மலையும் கடலும் குழ்தரப் பரசுராமனால் அமைக்கப்பட்டதென்று திருவாலங்காட்டுச் செப்பேடு செப்புகிறது.
இம்மலை நாட்டுத் துறைமுகப் பட்டினமான காந்தளூர்ச் சாலையில் போர் நடந்தது. அப்போரில் சேரனும் பாண்டியனும் சேர்ந்து சோழரை எதிர்த்தனர். பாண்டியன் அமரபுசங்கன் என்பவன்;[2] சேரன் பாஸ்கர ரவிவர்மன் திருவடி (கி.பி. 978-1036) என்பவன்.[3] போரில் சோழர்படை வெற்றி பெற்றது. இராசராசனது 4ஆம் ஆண்டுக் கல்வெட்டு ‘காந்தளூர்ச் சாலையில் கலம் அறுத்தருளி’ எனக் குறிப்பதால்,[4]இராசராசன் காந்தளூரில் இருந்த சேரர் மரக்கலங்களை அழித்தவன் என்பது புலனாகிறது.
ஆயினும், கி.பி 993 முதலே இராசராசன் கல்வெட்டுகள் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் காணக் கிடைத்தலால், இரண்டு நாடுகளையும் வென்று சோழர் ஆட்சியை அங்கு உண்டாக்கி அரசியல் அமைதியை நிறுவ நான்காண்டுகள் ஆகி இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. சேர நாட்டை வென்ற இராசராசன் அந்நாட்டில், தான் பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடு செய்தான் என்பது முன்னமே கூறப்பட்டதன்றோ? பஞ்சவன் மாராயன் பாண்டியனை ஒடச்செய்தான்; விழிஞம் என்னும் துறைமுகத்தைக் கைக்கொண்டான்.
இராசராசனுக்குத்தென்ன பராக்கிரமன் என்னும் விருதுப்பெயர் இருத்தலாலும், பாண்டி நாட்டிற் பற்பல இடத்தும் இவன் கல்வெட்டுகள் இருத்தலாலும், பாண்டிய மண்டலம் 'இராசராச மண்டலம் என வழங்கப் பெற்றமையாலும், இராசராசன் பாண்டிய நாட்டை முழுவதும் வென்று அடக்கி ஆண்டான் என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகிறதன்றோ?
மலை நாட்டுப் போர் : குடமலை நாடு என்பது குடகு நாடாகும். அந்நாட்டில் உதகை என்பது அரண் மிகுந்த இடமாக இருந்தது. இராசராசன் தன் தூதனைக் குடமலை நாட்டிற்கு அனுப்பினான். அவனைக் குடமலை நாட்டரசன் சிறை செய்தனனோ, அல்லது கொன்றனனோ புலப்படவில்லை. இராசராசன் அங்குப் படையெடுத்துச் சென்றான், உதகையை அடைய 18 காடுகள் தாண்டினான்; காவல்மிகுந்த உதகையை அழித்தான் குடமலைநாட்டைக் கைப்பற்றினான்.
இச்செயல் கி.பி. 1008 - க்குச் சிறிது முன் நடைபெற்றதாகும். இப்போரைப் பற்றிய குறிப்புகள் கலிங்கத்துப் பரணியிலும் மூவர் உலாவிலும் காணலாம். இப்படையெடுப்பில் தலைமை பூண்ட தானைத்தலைவன் இராசேந்திரன் போலும்![5] இப்படையெடுப்பின்போது குடமலை நாட்டை ஆண்டவன் மீனிசா என்பவன்.
போர் நடந்த இடம் பனசோகே என்பது. மீனிசா, போரில் திறம்பட நடந்துகொண்டதால், அவன் வீரத்தைப் பாராட்டிய இராசராசன், அவனுக்குச் சத்திரிய சிகாமணி கொங்காள்வான் என்ற பட்டம் சூட்டி, மாளவி என்னும் ஊரை நன்கொடையாகக் கொடுத்தான்.[6]
கொல்லம், மேற்கரை நாடுகள் : இராசேந்திரன் பிறகு கொல்லத்தின்மீது சென்று, கொல்லம், கொல்ல நாடு, கொடுங்கோளுர் முதலிய பகுதிகளில் இருந்த சிற்றரசரை வென்று மேலைக் கடற்கரை நாட்டையும் கைப்பற்றி, எங்கும் பெருவெற்றி பின்தொடர மீண்டான். இவ்வெற்றிகட்குப் பின் இராசராசன் ‘கீர்த்தி பராக்கிரம சோழன்’ என்னும் விருதுப்பெயர் பெற்றான்.
கங்கபாடி : கங்கபாடி என்பது மைசூரின் பெரும் பகுதியாகும். தலைநகரம் தலைக்காடு என்பது. இவர்கள் சோழர் பேரரசை எதிர்த்து நின்றவர்; பல்லவர் கால முதலே பல நூற்றாண்டுகளாகக் கங்கபாடியை ஆண்டு வந்தவர். நுளம்பர் என்பவர் இவர்கட்கு அடங்கியவர். இராசராசன் கொங்கு நாட்டிலிருந்து காவிரியைத் தாண்டிக் கங்கபாடியில் நுழைந்தான்; முதலில் தடிகைபாடியைக் கைக்கொண்டான்; கங்கபாடியையும் கைப்பற்றினான்.[7]
நுளம்பபாடி : நுளம்பபாடி என்பது மைசூரைச்சேர்ந்த தும்கூர், சித்தல் துர்க்கம் கோட்டங்களும், பெங்களுர் கோலார், பெல்லாரிக் கோட்டங்களும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதனை ஆண்டவர் நுளம்பப் பல்லவர் என்பவர். இவராட்சியில் சேலம், வட ஆர்க்காடு கோட்டங்களின் வடபகுதியும் சேர்ந்திருந்தது.[8] இந்நிலப் பகுதி இராசராசன் பேரரசிற் கலந்துவிட்ட பிறகு, நுளம்பப் பல்லவர் சிற்றரசராகவும் சோழ அரசியல் அலுவலாளராகவும் இருக்கலாயினர்.
ஐயப்பன் மகனான கன்னராசன் என்பவன் தடிகைபாடியின் ஒரு பகுதியை இராசராசற்கு அடங்கிய சிற்றரசனாக இருந்து ஆண்டு வந்தான் : ‘நொளம்பாதி ராசன்’ என்பவன் இராச ராசன் தானைத் தலைவனாக இருந்தான். ‘நொளம்பாதி ராசன் சொரபையன்’ என்னும் சிற்றரசன் ஒருவன் இருந்தான்.
தெலுங்க நாடு : தொண்டை நாட்டிற்கு வடக்கே கீழைச்சாளுக்கியர் ஆட்சி நெல்லூர் வரை பரவியிருந்தது. கிருஷ்ணையாறு முதல் வடபெண்ணையாறு வரை இருந்த நாடு சீட்புலிநாடு, பாகிநாடு என்று பெயர் பெற்றிருந்தது. இராசராசன் காருகுடியைச் சேர்ந்த பரமன் மழபாடியார் என்னும் மும்முடிச்சோழன் என்ற சேனைத் தலைவனைப் பெரும்படையோடு அங்கு அனுப்பினன். அத்தலைவன் பீமன் என்னும் அரசனை வென்று அந்நாடுகளைச் சோழப் பேரரசில் சேர்த்தான் மந்தை மந்தையாக ஆடுகளையும் பிற பொருள்களையும் கைக் கொண்டு மீண்டான் என்று காஞ்சிபுரக் கல்வெட்டொன்று கூறுகிறது.
[9] நெல்லூர்க் கோட்டத்தைச் சேர்ந்த ரெட்டி பாளையத்துக் கல்வெட்டில் இராசராசனது 8ஆம் ஆட்சி ஆண்டைக் குறிப்பிட்டு அவனது சிற்றரசன் அல்லது அரசியல் அலுவலாளனான மும்முடி வைதும்ப மகாராசன் ஆன துரை அரசன் என்பவன் தானம் செய்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.[10]
கீழைச் சாளுக்கிய நாடு : இராசராசன் காலத்தில் கீழைச் சாளுக்கிய நாடு பெருங்குழப்பத்தில் இருந்தது. அந்நாடு கிருஷ்ணை, கோதாவரியாறுகட்கு இடைப்பட்டது. அந்நாட்டு அரசமரபினருள் இரண்டு கிளையினர் தோன்றி ஒருவரை ஒருவர் நாட்டைவிட்டு விரட்ட முயன்றனர்.நாடு கலகத்திற்கு உட்பட்டது. சக்திவர்மன் என்பவன் ஒரு கட்சியினன். அவனை மற்றொரு கட்சியினர் நாட்டைவிட்டு விரட்டி விட்டனர்.
ஏறத்தாழ 27 ஆண்டுகள் சக்திவர்மன் மரபினர் நாட்டை ஆள இடமின்றித் தவித்தனர். இப்போராட்டம் கி.பி. 925-லிருந்து நடந்துவந்ததெனினும், உச்சநிலை பெற்றது இராசராசன் காலத்திலே ஆகும். சக்திவர்மன் மரபினர் அரசுக்குரிய மூத்த குடியினர். இளங்குடியினர் நாட்டைக் கவர்ந்து ஆண்டனர். சக்திவர்மன் இராசராசனைச் சரண் அடைந்தான். ஏறத்தாழக் கி.பி. 999-இல் இராசராசன் வேங்கி நாட்டைக் கைப்பற்றிச் சக்திவர்மனை அரசனாக்கினன். சக்திவர்மன் சோழனுக்கு அடங்கிய சிற்றரசனாக- ஆனால் தனி அரசனாக இருந்து வேங்கி நாட்டை ஆண்டுவந்தான்.
இவன் இளவலான விமலாதித்தனுக்கு இராசராசன் தன் மகளான குந்தவ்வையை மணம் செய்து கொடுத்தான்.[11] இவ்விரண்டு செயல்களாலும் கீழைச் சாளுக்கிய நாடு சோழப் பேரரசின் சிறந்த உறுப்பாக விளங்கியது. கீழைச் சாளுக்கிய மரபு சோழமரபுடன் ஒன்றுபட்டுவிட்டது; சோழப் பேரரசிற்கும் வடக்கில் அச்சம் இல்லாதொழிந்தது. இராசராசன் மருமகனான விமலாதித்தன் திருவையாற்றில் தம் மாமியார் கட்டிய கோவிலுக்குத்தானம் செய்துள்ளான்.[12]
கலிங்கநாடு : இராசராசன் தான் கலிங்கத்தை வென்றதாகக் கூறியுள்ளான். மகேந்திர மலையில் இரண்டு கல்வெட்டுகள்[13] கிடைத்தன. அவற்றில், ‘விமலாதித்தன் என்னும் குலூத நாட்டு அரசனை இராசேந்திரன் வென்றான்;
வென்று மகேந்திரமலை உச்சியில் வெற்றித்துரண் ஒன்றை நாட்டினான்’ என்னும் செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. ஆயின், இச் செய்தியை இராசேந்திரன் ஆட்சியில் நடந்ததாக அவனுடைய கல்வெட்டுகள் கூறவில்லை. ஆதலின், இப் படையெடுப்பும் வெற்றியும் இராசராசன் காலத்திற்றான் நடந்திருத்தல் வேண்டும். குலுரத நாடு என்பது மகேந்திர மலையைத் தன் அகத்தே கொண்ட கலிங்கநாடு போலும்! இங்குக் குறிப்பிட்ட விமலாதித்தன் சாளுக்கிய (முன் சொன்ன) விமலாதித்தன் எனத் தவறாகக் கொண்டு வரலாறு எழுதினோரும் உண்டு.
ஈழ மண்டலம் : கி.பி. 993-இல் வெளிவந்த கல்வெட்டுகளிலேயே இராசராசன் ஈழ மண்டலத்தை வென்றமை குறிப்பிடப்பட்டுள்ளது. “இராமன் குரங்குகளின் துணையைக் கொண்டு பாலம் கட்டி அரும்பாடுபட்டு இராவணனைக் கொன்றான். ஆயின், இராசராசன் பாலம் கட்டாமலே படைகளைக் கப்பல் மூலமாகக் கொண்டுசென்று இலங்கை இறைவனை எரிக்கு இரையாக்கினான். இதனால் இவன் இராமனினும் சிறந்தவனே ஆவன்” என்று திருவலாங்காட்டுப்பட்டயம் பகர்கின்றது.
இராசராசன் காலத்தில் இலங்கையில் குழப்பம் மிகுதியாக இருந்தது. இலங்கை அரசனான ஐந்தாம் மகிந்தன் தென்கிழக்கில் இருந்த மலை அரணையுடைய ‘ரோஹணம்’ என்னும் இடத்திற்குச் சென்று விட்டான். அச்சந்தர்ப்பத்தில் இராசராசன் வட இலங்கையைக் கைப்பற்றி, அதற்கு[14] மும்முடிச் சோழ மண்டலம் என்னும் பெயரிட்டான்.
இப்படையெடுப்பினால் அநுராதபுரம் அழிவுற்றது. பொலநருவா சோழர் தலைநகரம் ஆனது; அது ‘ஜனநாத மங்கலம்’ என்று பெயர் பெற்றது; இராசராசன் அத்தலை நகரில் சிவன் கோவில் ஒன்றைக் கட்டினான். இக்கோவில் சுதை, செங்கல் முதலியன கொண்டு அழுத்தமாகவும் அழகாகவும் கட்டப்பட்டது. சுற்றிலும் மதிலையுடைய கோநகரத்தில் இக்கோவில் அழகுற அமைந்துள்ளது.
இஃது இன்றும் தன் எழில் குன்றாது இருத்தல் வியப்புக்குரியது.[15] தாழி குமரன் என்னும் சோழ அரசியற் பணியாளன் ஒருவன் மாதோட்டத்தில் (இராசராச புரத்தில்), அழகிய கோவில் ஒன்றைக் கட்டி ‘இராசரா சேச்சரம்’ எனப் பெயரிட்டான்; அதற்குப் பல தானங்கள் செய்துள்ளான்.[16] இராசராசன் தான் தஞ்சாவூரிற்கட்டிய பெரிய கோவிலுக்கு ஈழத்திலிருந்து பணமும் இலுப்பைப் பாலும் அனுப்ப ஏற்பாடு செய்திருந்தான்.[17]
மேலைச் சாளுக்கியர் : இரட்டபாடி என்பது இராட்டிரகூடர் அரசாண்ட நிலப்பகுதி. இதுவே பல்லவர் காலத்தில் மேலைச்சாளுக்கியர் ஆண்ட நாடு. கி.பி. 975-இல் இரட்டரை வலிதொலைத்து மீட்டும் மேலைச் சாளுக்கியர் தம் பண்டைப் பேரரசை நிலைநிறுத்தினர். அவருள் முதல்வன் இரண்டாம் தைலபன் எனப்பட்ட ஆகவமல்லன் ஆவன். இப்பேரரசன் கி.பி. 992-இல் இராசராசனை வென்றதாகக் கல்வெட்டு ஒன்றில் கூறிக்கொண்டான்.[18] ஆனால், இதைப் பற்றி விளக்கம் இதுகாறும் கிடைத்திலது. கி.பி. 992-க்கும் பிறகு அரசனான சத்தியாஸ்ரயன் இராசராசனுடன் போரிட்டான் போலும் இராசராசன் சத்யாஸ்ரயனுடன் போரிட்டு அவனது செல்வத்தைத் தஞ்சைப் பெரிய கோவில் கட்டச் செலவழித்தான் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன.
[19] “சத்யாஸ்ரயன் போர்க்களத்திலிருந்து புறங்காட்டிஓடிவிட்டான். அவன் ‘கஷ்டாஸ்ரயன்’ ஆனான்’ என்று திருவாலங்காட்டுப் பட்டயம் பகர்கின்றது. சத்யாஸ்ரயனுடைய தார்வார் (ஹொட்டுர்) கல்வெட்டு, (கி.பி.1005) “சோழர் மரபுக்கணியான இராசராச நித்தியவிநோதனது மகனான சோழ இராசேந்திர வித்யாதரன் தோணுார் (பீசப்பூர்க் கோட்டத்தில் உள்ளது) வரை வந்தான்; அவன் 9 லக்கம் துருப்புகளுடன் வந்தான்; நாடு முழுவதையும் கொள்ளை அடித்தான்; பெண்கள் குழந்தைகள் முதலியவர்களைக் கொன்றான். தமிழரை ஒழிக்கும் சத்யாஸ்ரயன் இராசேந்திரனைப் புறங்காட்டி ஒடச்செய்தான்” என்று கூறுகிறது.[20]
இக்குறிப்புகளால், முதலில் சத்யாஸ்ரயன் தோற்றனன் என்பதும், பிறகு சோழர் அந்நாட்டை ஆள முடியாமல் திரும்பிவிட்டனர் என்பதும் சத்யாஸ்ரயன் படைவலி மிக்கவன் என்பதும் தெரிகின்றன. இதுகாறும் கூறிவந்த செய்திகளால், இராசராசன் வடக்கே கிருஷ்ணையாறு முதல், வடமேற்கே துங்கபத்திரையாறு முதல் தெற்கே குமரிமுனை வரை, கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லைகளாகக் கொண்டதென்இந்தியா முழுவதையும் பிடித்து ஆண்டவன் என்பது நன்கு விளங்குமன்றோ? இவற்கு முன் இங்ஙனம் சோழப் பேரரசை உண்டாக்கினோர் ஒருவரும் இலர் இலர்! இராசராசன் கங்கபாடி, வேங்கி மண்டலம் இரண்டிற்கும் தன் மகனான பேராற்றல் படைத்த இராசேந்திரனையே மகா தண்டநாயகனாக வைத்திருந்தான்.
இங்ஙனம்செய்துவைத்த பாதுகாவலால், மேலைச் சாளுக்கியர் சோழநாட்டின் மீது படையெடுக்கக் கூடவில்லை. மேலும், மேலை சாளுக்கியர் வடக்கே பரமாரர் என்னும் மாளுவநாட்டு அரசரால் அடிக்கடி துன்பத்திற்கு உள்ளாயினர். வடக்கே பரமாரராலும் தெற்கே சோழராலும் சாளுக்கியர் அடைந்த இன்னல்கள் பலவாகும்.
பழந்திவு பன்னிராயிரம்: இராசராசன் அலைகடல் நடுவிற் பலகலம் செலுத்தி, முந்நீர்ப் பழந்தீவு பன்னிராயிரமும்[21] கைப்பற்றினன். இங்ஙனம் சென்ற இடம் எல்லாம் வெற்றிச் சிறப்பெய்திய இராசராசன் சயங்கொண்ட சோழன் எனப்பட்டான்.
அதுமுதல் தொண்டை மண்டலம் ‘சயங்கொண்ட சோழ மண்டலம்’ எனப்பட்டது. இராசராசன் உய்யக் கொண்டான் மலை (திருக்கற்குடி) நாயனார்க்குப் பொற்பட்டம் ஒன்றை அளித்தனன். அதன் பெயர் 'சயங்கொண்டசோழன்’ என்பது[22]. கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ள ஊரும் ‘சயங்கொண்ட சோழபுரம்’ எனப்பட்டது.
சிற்றரசர் : பழுவேட்டரையர் கந்தன் மறவன் என்பவன் ஒரு சிற்றரசன். இப்பழுவேட்டரையர் கீழ்ப் பழுவூர். மேலப்பழுவூர்களை ஆண்டுவந்தவர். இவர் மரபிற்றான் முதற்பராந்தகன் பெண் எடுத்தான். அதுமுதல் இம்மரபினர் சோழர்க்குப் பெண் கொடுக்கும் உரிமைபெற்றிருந்தனர். இவர்கள் இராசராசனுக்குக் கீழ்த் தம்மாட்சி நடத்தினோர் ஆவர்.[23]
கந்தன் மறவன் மேலப்பழுவூரில் திருத்தோட்டம் உடையார்க்குக் கோவில் கட்டினவன்; நந்தி புரத்தில் இருந்த வரிமுறையைத் தன் ஊரிலும் ஏற்படுத்தியவன்.[24] வட ஆர்க்காடு கோட்டத்தில் இலாடராயர் என்னும் சிற்றரச மரபினர் ஆண்டுவந்தனர். இவர்கள் பஞ்சபாண்டவர் மலை என்னும் இடத்தில் ஆட்சி புரிந்தோர் ஆவர். இவருள் உடையார் இலாடராயர் புகழ்விப்பவர் கண்டன் ஒருவன். அவன் மகன் உடையார் வீரசோழர் என்பவன் ஒருவன். இவனே இராசராசன் காலத்தவன்; தன் மனைவி வேண்டுகோளுக்கு இணங்க ஒரு சமணப் பள்ளிக்குத் தானம் செய்தவன்.[25] கடப்பைக் கோட்டத்தில் மகாராசப் பாடியை ஆண்டு வந்த துக்கரை என்னும் பெயருடைய வைதும்பராயன் மகன் நன்னமராயர் என்பவன் திருவல்லம் (வடஆர்க்காடு) கோவிலுக்குத் தானம் செய்துள்ளான்[26].கி.பி. 993-இல் மும்முடி வைதும்ப மகாராசன் என்பவன் ரெட்டிபானையம் கோவிலுக்குத் தானம் செய்தான்.
சளுக்கிவீமன் என்பவன் ஒரு சிற்றரசன். அவன் மனைவி ‘விமயன் வம்பவை’ திருவையாற்றுக் கோவிலில் விளக்குவைக்கப் பொருள் உதவி செய்தாள். அச் சிற்றரசன் எந்தப் பகுதியை ஆண்டவன் என்பது விளங்கவில்லை[27] இங்ஙனம் சிற்றரசர் பலர் சோழர் பேரரசில் இருந்தனர். மறவன் நரசிம்மவர்மன் என்னும் பாண அரசன் தென் ஆர்க்காடு கோட்டத்தில் ‘சம்பை’ என்னுமிடத்தருகில் இருந்தவன் ஆவன். இவன் அந்த இடத்தில் ஓர் ஏரியை வெட்டுவித்தான்.[28]
அரசியல் அலுவலாளர் : கல்வெட்டுகளிற் கண்ட குறிப்பிடத்தக்க அரசியல் அலுவலாளர் இவராவர் - மகா தண்ட நாயகன் பிஞ்சவன் மாராயன் என்பவன் இராசராசன் மகனான இராசேந்திரன் என்பர் ஆராய்ச்சியாளர்.
வேறு சிலர் அவன் இராசேந்திரன் அல்லன் என்பர். உத்தம சோழன் (மதுராந்தகன்) மகனான கண்டராதித்தன்[29] நாடு முழுவதும் சுற்றிக் கோவிற் பணிகளைப் பார்வை யிட்டுவந்த பேரதிகாரி ஆவன். இவனே திருவிசைப்பாப் பாடிய கண்டராதித்தர் என்று சிலர் தவறாகக் கொண்டனர். பரமன்மழபாடியார் என்னும் மும்முடிச் சோழன் சீட்புலி நாடு, பாகிநாடு என்பவற்றை வென்ற தானைத் தலைவன் ஆவன். சேனாதிபதி ஸ்ரீ கிருஷ்ணன் இராமன் என்பவன் ஒருவன். இவன் அமண்குடியைச் சேர்ந்தவன். இவன் பெரிய கோவிலில் திருச்சுற்றாலையையும் மண்டபத்தையும் கட்டியவன் ஆவன்[30]. சேனாதிபதி குரவன் உலகளந்தான் என்பவன் ஒருவன். இவன் ‘இராசராச மகாராசன்’ எனப்பட்டான்.
இவன் சோழப் பேரரசு முழுவதும் அளந்து வரிவிதிக்கப் பொறுப் பாளியாக் இருந்த பெரும் அரசியல் அறிஞன் ஆவன்[31], உலகளவித்த திருவடிகள் சாத்தன் என்பவன் ஒருவன். இவனும் மேற்சொன்ன பணியில் ஈடுபட்டிருந்தனன்[32]. ஈராயிரவன் பல்லவரையன் - மும்முடிச் சோழன் என்பவன் அரசியல் வருவாயைக் கவனித்த பெருந்தரக்காரன் ஆவன்[33], கோலாரை ஆண்ட கங்கர் மரபினனான திருவையன் சங்கரதேவன் என்பவன் ஒர் உயர்தர அலுவலாளனாக இருந்தான். அவன் தன் தந்தை பெயரால் திருவல்லத்தில் ‘திருவைய ஈச்சரம்’ என்னும் கோவிலைக் கட்டினான்[34]. இவருள் கிருஷ்ணன் இராமன், ஈராயிரவன், பருத்திக்குடையான் வேளான் உத்தம சோழன், மதுராந்தக மூவேந்த வேளான் என்பவர் அமைச்சராக இருந்தனர் என்பர்[35].
‘அதிகாரி இராசேந்திர சிங்க மூவேந்த வேளார்’, ‘அதிகாரி காஞ்சி வாயிலுடையார் உதயதிவாகரன் தில்லையாளியாரான இராசராச மூவேந்த வேளார்’ முதலியோர் உடன் கூட்டத்து அதிகாரிகளாக இருந்தனர்[36]. அரசியல் அலுவலைக் கவனிக்க ஆரூரன் அரவணையனான பராக்கிரம சோழ மூவேந்த வேளான்.
தத்தன் சேந்தனான செம்பியன் மூவேந்த வேளான், அருங்குன்றம் உடையான் பொற்காரி, மீனவன் மூவேந்த வேளான் முதலியோர் இருந்தனர் என்று ஆனைமங்கலச் செப்பேடு செப்புகிறது[37]. வரியைக் கணக்கில் பதிவு செய்யும் வரியிலார், ‘வரியை இன்னவாறு செலவிடுக’ எனப்பாகுபாடு செய்யும் வரிக்குக் கூறுசெய்வார், காரியக் குறிப்பெழுதும் பட்டோலைப் பெருமான், வந்த ஒலைகளைப் பார்வையிட்டு விடை வரையும் விடை அதிகாரி, நாட்டை வகைப்படுத்துவோர், நாட்டைக் கண்காணிப்பவர், நாட்டைச் சுற்றிப்பார்த்து நன்மைதீமைகளை ஆராய்பவர், நீதிமன்றத்தார், நாணய அதிகாரிகள் முதலிய பல திறப்பட்ட அரசியல் அலுவலாளர் இராசராசன் ஆட்சியில் இடம்பெற்று இருந்தனர் என்பது எண்ணிறந்த கல்வெட்டுகளால் அறியக்கிடத்தல் காண்க.
‘சோழர் அரசியல்’ என்னும் பகுதியில் விரிவு காண்க. பாண்டிய நாட்டுப் பழைய வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இராசராசன் காலத்தில் புதிய தமிழில் மாற்றி எழுதப்பட்டன என்பது இங்குக் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.[38]
இராசராசன் அரசியல் இன்றைய நாகரிக அரசியல் போன்றது. இவன் நாடு முழுவதும் அளப்பித்தான்; இறையிலி நிலங்களைப் பிரித்தான் பிற நிலங்கட்குத் தரம் வாரியாக வரிவிதிக்க ஏற்பாடு செய்தான்; வரியை வசூலிக்கப் பல அதிகாரிகளை ஏற்படுத்தினான்;
எல்லா வகை வரிகளும் கவனிக்க உயர்தர அலுவலாளர் குழுவை வைத்தான். தனித்தனி மண்டல காரியங்களைக் கவனிக்கும் தனித்தனி அலுவலாளர் ஒருபால், எல்லா மண்டலங்களைக் கவனிக்கப் பேரலுவலாளர் ஒருபால் ஆக, அரசியல் அமைப்பு வியத்தகு வண்ணம் அமைந்திருந்தது. ஊர் அவைகள் ஊராட்சியைக் குறைவற நடத்தின. ஒவ்வொரு மண்டலத்தும் திறம்பட்ட படைகள் நிறுத்தப்பட்டன; எல்லைப் புறங்களில் காவற்படைகள் இருந்தன.
புகழ்பெற்ற கப்பற் படை இணையின்றி இலங்கியது. சுருங்கக் கூறின், தென் இந்தியாவில் பேரரசை ஏற்படுத்திய பேரரசர்களில் இராசராசனே சிறந்தவன் என்னல் மிகையாகாது.
சமயக்கொள்கை : இராசராசன் சிறந்த சிவ பக்தன். இவன் கட்டிய பெரிய கோவிலே இதற்குப் போதிய சான்றாகும். எனினும், இவன், இந்தியப் பேரரசைப் போலவே தன்பெருநாட்டில் இருந்த எல்லாச் சமயங்களையும் சமமாகவே மதித்து நடந்தவன். பெரிய கோவிற்கவர்களில் உள்ள சிற்பங்கள், மைசூரில் இவன் கட்டிய விஷ்ணு கோவில்களும், விஷ்ணு கோவில்கட்கு இவன் செய்துள்ள தானங்களும் இவனது சமரசப்பட்ட மனப்போக்கை விளக்குவதாகும்.
நாகப்பட்டினத்தில் புத்த விகாரம் கட்டப் பொருள் உதவி புரிந்த உத்தமன் இவன் இவனது ஆட்சியில் இருந்த சிற்றரசர் சிலர், சமணர் கோவில்கட்குத் தருமம் செய்துள்ளனர் என்பதையும் நோக்க, இப்பேரரசன், தன் சிற்றரசரையும் குடிகளையும் தத்தமது விருப்பத்துக்கியைந்த சமயத்தைப் பின்பற்ற உரிமை அளித்திருந்தனன் என்பது நன்கு புலனாகின்றது. இவனது ஆட்சிக் காலத்திற்றான் பாடல் பெற்ற பல கோவில்கள் கற்றளிகளாக மாறின, புதிய பல சிவன் கோவில்கள் கட்டப்பட்டன. பல கோவில்கள் பலரால் ஆதரிக்கப்பெற்றன. கோவிற் பணிகள் வியத்தகு முறையிற் பெருகின. அவற்றின் விவரமெல்லாம் ‘சோழர் கோவிற் பணிகள்’ என்னும் பகுதியிற் பரக்கக் காண்க.