IPL Match46 - 3வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்து, சென்னையை பேட் செய்ய பணித்தது.
தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டிவோன் கான்வே களமிறங்கினர். தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ருதுராஜ் கெய்க்வாட் 33 பந்துகளில் அரை சதம் கடந்தார். சதத்தை நெருங்க இன்னும் 1 ரன்னே இருந்த நிலையில், கேட்ச் அவுட்டாகி ஏமாற்றத்துடன் வெளியேறினார் கெய்க்வாட். 57 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் குவித்தார்.
அதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் தோனி 1 பவுண்டரி உள்பட 7 பந்துகளில் 8 ரன்கள் அடித்து நடராஜன் பந்திலேயே அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது சென்னை அணி. கடைசி வரை ஆட்டமிழக்காத டிவோன் கான்வே 55 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார்.
ஐதராபாத் தரப்பில் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 203 ரன்கள் என்கிற இலக்குடன் ஐதராபாத் அணியின் கனே வில்லியம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர். அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ராகுல் திரிபாதி வந்த வேகத்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் நடையைக் கட்டினார். 37 பந்துகளுக்கு 47 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்த ஐதராபாத் தோல்வியை சந்தித்தது. 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி