சர்வகட்சி அரசாங்கம் ராஜபக்‌ஷர்களை காப்பாற்றுவதாய் அமையக்கூடாது

Mayoorikka
2 years ago
சர்வகட்சி அரசாங்கம் ராஜபக்‌ஷர்களை காப்பாற்றுவதாய் அமையக்கூடாது

ராஜபக்‌ஷர்ளைக் காப்பாற்றி அவர்களுக்கு மன்னிப்பு வழங்க தமது நேரத்தை ஒதுக்குவது என்பது  சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான நோக்கமாக இருக்கக்கூடாது. அது காலத்தின் தேவையும் அல்ல, மாறாக சர்வகட்சி அரசாங்கம் சில முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் 

நாம் முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் பொருளாதார அரசியல் பிரச்சினையில் இருந்து விடுபட முதலில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் .இதன் போது நாம் இதுவரை காலம் நாட்டை அழிவுக்கு உள்ளாக்கி வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்று நாட்டை கொள்ளையடித்த ராஜபக்‌ஷர்களை பாதுகாக்கும் அரசாங்கம் அல்ல, மாறாக எமது நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க கூடிய குறுகிய மற்றும் மத்திய கால தீர்வுகளை கொண்ட சர்வகட்சி அரசாங்கமாக அமைய வேண்டும்.

அவ்வாறான அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கு இடமளிக்கும் வகையில் கோட்டாபய ராஜபக்‌ஷர் ஜனாதிபதி தனது பதவியை துறக்க வேண்டும். அவ்வாறு அவர் விலகும் திகதி காலம் என்பன தெளிவாக முன்மொழியப்பட்ட வேண்டும். பதவியேற்கும் இடைக்கால அரசாங்கம் 20 ஆவது திருத்தச் சடத்தை நீக்க வேண்டும். ஜனாதிபதியுடைய அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டும் என்பன போன்ற ஜனநாயக அரசியல் அமைப்பு முறையினை நிறைவேற்ற வேண்டும். 

அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட்டு அவைகளுக்கு கிடைக்கும் பொருளாதார உதவி, ஊடக பிரசார நேரம் போன்றன தொடர்பாக தெளிவாக முன்னெடுக்கப்பட கூடியவகையில் மீண்டும் தேர்தல்கள் தொடர்பான சட்ட திட்டங்களை ஒழுங்கு படுத்தப்பட வேண்டும்.
ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் காணப்படுவது போல் ஊழல் ஒழிப்பு நிர்வாகம் ஒன்றை நிறுவ வேண்டும். 

இடைக்கால அரசாங்கம் மக்களுக்கு விருப்பமான அரசாங்கம் ஒன்றை தெரிவு செய்து கொள்ளக்கூடிய வகையில் சுயாதீனமாக செயற்பட்டு தேர்தல்களை நடத்தக்கூடிய சுதந்திரமான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் அத்தோடு சுதந்திர தேர்தல் ஆணைக்குழுவிற்கு பூரண அவகாசம் வழங்கக்கூடிய வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என நாம் வேண்டிக் கொள்கிறோம் என்றார்.