பொறுமையாக இருங்கள் - இழந்த அனைத்தையும் மீளக் கொடுப்பேன்: பிரதமர் ரணில்

Prathees
2 years ago
பொறுமையாக இருங்கள் - இழந்த அனைத்தையும் மீளக் கொடுப்பேன்: பிரதமர் ரணில்

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை சீரடைவதற்கு முன்னர் இன்னும் மோசமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிபிசி உலகச் செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் மூன்று வேளை உணவு பெறும் பொருளாதாரத்தை உருவாக்குவதை உறுதி செய்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அதிக நிதி உதவிகளை வழங்குமாறும் சர்வதேச சமூகத்திடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கைக்கு உடனடி உதவிகளை பெற்றுக்கொள்வதாகவும் பஞ்சம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.

நாட்டிற்குத் தேவையான உணவைக் கண்டுபிடித்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.

இலங்கையில் கணக்குகளை சரிபார்க்க கால அவகாசம் தேவை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு தேவை என்றும், ஒரு வாரத்தில் உறுதியான பதில் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வற்புறுத்தும் போராட்டக்காரர்களின் உணர்வுகளுடன் தான் உடன்படுவதாகவும் ஆனால் அது நடக்காது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உண்மையான பொருளாதாரம் தற்போது செயலிழந்து போய்விட்டது என்றும், அது வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் பிரதமர் இந்த நாட்டு மக்களை பொறுமையாக இருக்கச் சொல்கிறார்.

இழந்த அனைத்தையும் மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.