முல்லைத்தீவு செம்மலை கடலில் காணாமல் போன மூவரில் 3 வது நபரின் சடலம் மீட்பு

Prathees
2 years ago
முல்லைத்தீவு செம்மலை கடலில் காணாமல் போன மூவரில் 3 வது நபரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு செம்மலை கடலில் கடந்த 10.05.2022 அன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் காணாமல் போயிருந்தனர்.

முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலை கடலில் நீராடுவதற்காக வருகைதந்த நிலையில் கடல் பந்து விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்களில் ஒருவர் பந்து எடுக்க சென்ற நிலையில் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஏனைய இரு சகோதர்களும் ஈடுபட்டுள்ளபோது அவர்களும் அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

அளம்பிலை சேர்ந்த பத்மநாதன் விஸ்வநாதன் (29) பத்மநாதன் விஜித் (26) பத்மநாதன் விழித்திரன் (22) ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களே அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் கிராம மீனவர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தின் கீழுள்ள மீனவ அமைப்புக்கள் இணைந்து தேடுதல் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் 11.05.2022 அன்று காலை 7.30 மணியளவில் 22 அகவையுடைய விழித்திரன் அவர்களது உடலம் மீட்கப்பட்ட நிலையில் 11.05.2022 அன்று நண்பகல் 12.20 மணிக்கு 26 அகவையுடைய விஜித் அவர்களுடைய உடலம் மீட்கப்பட்டது.

 அதனை தொடர்ந்து மூன்றாவது நபரை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்ற போதும் அவரது உடலம் கிடைக்காத நிலையில் நேற்று 13.05.2022 உடலம் மீட்கப்பட்ட இருவரது உடல்கள் மற்றும் மூத்த சகோதரனும் புகைப்படம் தாங்கியவாறு இறுதிக் கிரியைகள் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மூத்த சகோதரரான விஸ்வநாதன் அவர்களுடைய உடலம் குறித்த பகுதியில் உள்ள கற்பாறையில் சிக்குண்டு இருந்ததை இன்று (14) மீனவர்கள் கண்ட நிலையில் உடலம் மீனவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.