எரிபொருள், எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில் மண்ணெண்ணெய் இலவசமாக பகிர்ந்தளிப்பு

#SriLanka #Fuel
எரிபொருள், எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில் மண்ணெண்ணெய் இலவசமாக பகிர்ந்தளிப்பு

எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியவசியப்  பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில் கொம்பனித் தெரு பகுதி மக்களுக்கு ஒருவருக்கு தலா ஒரு போத்தல் மண்ணெண்ணெய்யை இலவசமாக பகிர்ந்தளிக்கும் சமூக வேலைத்திட்டமொன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான மொஹமட் அனாஸினால் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக மீண்டும் மண்ணெண்ணெய் பாவனைக்கு திரும்பியுள்ள இப்பகுதி மக்கள் தற்போது மண்ணெண்ணெய் இல்லாமல் கஷ்டப்பட்டுவரும் சூழ்நிலையில், கொழும்பு மாநாகர சபை உறுப்பினரான மொஹமட் அனாஸ் அனுசரணையாளர்களின் உதவியுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட மண்ணெண்ணெய்  கொம்பனித் தெரு பகுதி மக்களுக்கு கடந்த புதன்கிழமையன்று பகிர்ந்தளிக்கப்பட்டது.

இது குறித்து கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் அனாஸ் கூறுகையில்,

"நாட்டில் அனைத்து மக்களைப் போலவே எமது கொம்பனித்தெரு மக்கள் மிகவும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். 
இவ்வாறான நிலையில் எமது பகுதி வாழ் மக்களுக்கு கடந்த கொரோனா காலங்களில் உதவி செய்திருந்ததைப் போலவே இம்முறையும் ஏதாவது ஒரு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டுமென்ற சிந்தணை என் மனதில் இருந்தது. 

எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் இந்த மண்ணெண்ணெய் எமக்கு கிடைத்ததுடன், இதனை பெற்றக்கொடுக்க உதவிய அனுசரணையாளர்களையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்" என்றார்.

அரசியல்வாதிகள் சிலர் தமது சுயதேவைக்காக சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் ஆகியவற்றை பதுக்கி வைக்கும் மோசமான சூழ்நிலைகள் காணப்பட்டு வந்தாலும், இவரின் இந்த முன்மாதிரிகையான செயல் ஏனைய அரசியல்வாதிகளுக்கு சிறந்த முன்னுதாரணமாகும்.