சமநிலையில் முடிந்த இலங்கை பங்களாதேஷ் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, தனது முதல் இன்னிங்சிற்காக இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 397 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 199 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது துர்திஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக அவர் தனது இரண்டாவது டெஸ்ட் இரட்டைச் சதத்தை ஒரு ஓட்டத்தால் தவறவிட்டுள்ளார்.
மேலும், தினேஷ் சந்திமால் 66 ஓட்டங்களையும் குசல் மெந்திஸ் 54 ஓட்டங்களையும் மற்றும் ஓசத பெர்ணான்டோ 36 ஓட்டங்களையும் இலங்கை அணி சார்பில் பெற்றுக் கொடுத்திருந்தனர்.
பந்து வீச்சில் நஹீம் ஹசன் 6 விக்கெட்டுக்களையும் சகிப் ஹல் ஹசன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
இந்நிலையில் பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்களையும் இழந்து 465 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் தமீம் இக்பால் 133 ஓட்டங்களையும் முஸ்புகுர் ரஹீம் 105 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டது.
பந்துவீச்சில் விஸ்வ பெர்ணான்டோ உபாதைக்கு உட்பட்டதன் காரணமாக அவருக்கு பதிலாக அணியில் இணைந்த கசுன் ராஜித 4 விக்கெட்களையும் அசித பெர்ணான்டோ 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.
தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்து 260 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அதனடிப்படையில் 5 ஆம் நாள் முடிவில் இலங்கை அணி 192 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த நிலையில் போட்டியை இடைநிறுத்தியது.
இலங்கை அணி சார்ப்பில் நிரோஷன் திக்வெல்ல ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்