இறுதி விடை பெற்றார் சிறுமி யதுர்சி

வவுனியாவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 16 வயது சிறுமி ராசேந்திரன் யதுர்சியின் இறுதிக்கிரியை பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இன்றைய தினம் (02-06-2022) இடம்பெற்றுள்ளது.
கடந்த 30ஆம் திகதி மாலை மேலதிக வகுப்பிற்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
பொலிஸார் மற்றும் உறவினர்கள் முன்னெடுத்த தேடுதலின் போது சிறுமியின் சடலம் பராமரிப்பற்ற கிணற்றில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து சிறுமியின் சடலம் வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போது நீர் சென்றமையினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறுமியின் உடலில் எவ்வித காயங்களோ அல்லது எவ்வித தடயங்களோ காணப்பட்டவில்லை எனவும் சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுஜன் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் சிறுமியின் இறுதிக்கிரியை இன்று, வவுனியா - கணேசபுரம் பகுதியில் சிறுமி வசித்து வந்த அவரது மாமாவின் வீட்டில் இடம்பெற்றிருந்தது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கண்ணீருக்கு மத்தியில் சிறுமியின் உடல் கணேசபுரம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



