விக்கும் லியனகே மீது வெளியான போர்க்குற்றச்சாட்டுகள்

Kanimoli
1 year ago
விக்கும் லியனகே மீது வெளியான போர்க்குற்றச்சாட்டுகள்

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி விக்கும் லியனகே மீது போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போரின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய படையணியான, 58ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராகவும் போர்க் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே, புதிய இராணுவத் தளபதி விக்கும் லியனகேவுக்கு எதிராக புலம்பெயர் விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டிடம் முறைப்பாடு செய்துள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

விக்கும் லியனகே கஜபா படையணியில் இணைந்து முல்லைத்தீவின் வசுவமடு, புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எவ்வித ஆதாரமும் இன்றியே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என ஜெனிவா வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
விக்கும் லியனகே போர்க்குற்றங்களை இழைத்ததாக சாட்சியமளிக்க, புலம்பெயர் நாடுகளில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் 200 பேர் முன்வந்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.