இலங்கையர் ஒருவரிடமிருந்து சுமார் 1500 அமெரிக்க டொலர்களை பலவந்தமாக பறிமுதல் செய்த அதிகாரிகள்

வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த இலங்கையர் ஒருவரிடமிருந்து சுமார் 1500 அமெரிக்க டொலர்களை பலவந்தமாக பறிமுதல் செய்த இரண்டு அதிகாரிகள் தொடர்பில் உதவி சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய சுங்கத் தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. நேற்று முன்தினம் (15ம் திகதி) நாட்டிற்கு வந்திருந்த இலங்கையரிடம் சுமார் 16,500 அமெரிக்க டொலர்கள் ரொக்கமாக இருந்துள்ளது.
எனினும், இரண்டு உதவி சுங்க அத்தியட்சகர்களும் 15,000 டொலர்களுக்கும் மேல் எடுத்துச் செல்ல முடியாது என கூறி பயணியிடம் இருந்து சுமார் 1500 அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்தில் உள்ள சுங்க பிரதி பணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட நபர் செய்த முறைப்பாட்டையடுத்து, இரண்டு உதவி சுங்க அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரண்டு உதவி சுங்க அத்தியட்சகர்களினால் பெறப்பட்ட 1500 அமெரிக்க டொலர்கள் பாதிக்கப்பட்ட இலங்கையருக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.



