அது என்ன Neo banking? மற்ற வங்கிகளுக்கும் இவற்றுக்கும் என்ன வித்தியாசம்?
மனித இனம் வணிகத்தில் செழிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து வங்கி சேவைகள் வளர்ந்து வருகின்றன. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த வங்கி சேவைகள், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல மாற்றங்களை எதிர்கொண்டு வருகின்றன. அப்படி வங்கி மற்றும் நிதி உலகத்தில் புதிதாக பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் தான் NEO வங்கிகள்.
யார் இந்த NEO வங்கிகள்?
தொழில்நுட்பத்தை மட்டுமே முழுமையாக நம்பி களமிறங்கும் இணைய வங்கிகள்தான் இந்த NEO வங்கிகள். சொல்லப் போனால் இவர்களை வங்கி என்றே இந்தியாவில் சொல்லக் கூடாது. நிதிசார் தொழில்நுட்ப நிறுவனம் என்று வேண்டுமானால் கூறலாம்.
இவர்களுக்கு எங்குமே கிளைகள், ஏடிஎம் எந்திரங்கள் இருக்காது. இணையம் மற்றும் செயலிகள் வழியே தங்கள் வியாபாரத்தை நடத்துவர். அதுதான் அவர்களது வாடிக்கையாளர்களுக்கும் அந்நிறுவனத்துக்கும் இடையில் உள்ள ஒரே தொடர்பு. அதோடு இதுபோன்ற நிதிசார் தொழில்நுட்ப நிறுவனங்களை இதுவரை இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி, ஒரு வங்கியாக அங்கீகரிக்கவே இல்லை.
NEO நிறுவனங்கள் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்துவோரைத் தங்களின் வாடிக்கையாளராகக் கருதுகிறது. பி டபிள்யூ சி என்கிற நிறுவனம் கடந்த 2021 செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வரும் 2040ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 96 சதவீதம் பேர் ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்துவர் என்கிறது.
2026ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் NEO நிறுவனங்களின் சந்தை 333.4 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொடுமென கே பி வி என்கிற ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே இந்தியாவில் எதிர்காலத்தில் NEO நிறுவனங்கள், தங்களை ஒரு NEO வங்கிகளாக மாற்றிக் கொண்டு செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
NEO நிறுவனங்களின் சேவைகள் & நன்மைகள்:
மிக விரைவாக கடன் கொடுப்பது, பணப் பரிமாற்றம் தொடர்பான சேவைகளை வழங்குவது, ரிக்கரிங் பேமெண்ட் வசதிகளை எந்திரமயமாக்கும் சேவையை வழங்குவது, பணப்பரிமாற்றம் தொடர்பான விவரங்களை வைத்து பகுப்பாய்வு செய்து தரவுச் சுருக்கங்களை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது... என பல புதிய சேவைகளை NEO நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
ஒருவாடிக்கையாளருக்கு ஒரு பிரத்யேக பிரச்சனை எழுகிறது என்றால், அப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் NEO நிறுவனங்கள் செயல்படும். பிறகு அச்சேவையை மற்ற நிறுவனங்களுக்கும் வழங்கி பணம் பார்க்கும். ஆனால் பாரம்பரிய வங்கிகளில், வாடிக்கையாளர்களுக்கு தகுந்தாற் போல வங்கிகளின் சேவை பெரிய அளவில் மாறுபடாது.
NEO நிறுவனங்களில் அதிக நெறிமுறை சிக்கல்கள் இல்லை, யாருக்கு எவ்வளவு கடன் கொடுக்க வேண்டும் என்கிற வரையறைகள் கிடையாது என்பதால், அவர்களால் குறைந்த செலவில் மக்களுக்கு நிதி சேவை வழங்க முடியும். குறிப்பாக மாத அல்லது ஆண்டுக் கட்டணங்களைக் கூட வசூலிக்காமல் சேவைகளை வழங்க முடியும்.
NEO நிறுவனங்களின் மிகப்பெரிய நன்மையே அதன் வேகம்தான். ஒரு காணொளியை டச் செய்து அது ஒளிபரப்பாக 1.3 நொடி தாமதமானால் கூட ப்ப்ச்ச்... என சிணுங்கும் மக்கள் அதிகரித்து வரும் நிலையில், நாட்கணக்கில் பாரம்பரிய வங்கிகளுக்கு அலைந்து நிதி சேவைகளைப் பெற மக்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள், NEO நிறுவனங்களின் பிரத்யேக வாடிக்கையாளர்கள் ஆகலாம்.
வங்கி சேவை என்பது பணப்பரிமாற்றத்தைத் தாண்டி, யூசர் எக்ஸ்பீரியன்ஸ், டேட்டா அனாலிசிஸ், இன்னொவேஷன்... போன்றவைகளில் இப்போதும் பல பாரம்பரிய வங்கிகள் சொதப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த ஏரியாவைத் தான் NEO நிறுவனங்கள் தங்களின் களமாகக் கொண்டு விளையாடத் தொடங்கியுள்ளனர்.
வங்கிகள் Vs NEO வங்கிகள்:
மக்களிடம் டெபாசிட் மூலம் பணத்தைப் பெற்று, அப்பணத்தை கடன் கொடுத்து வட்டி மூலம் வருமானம் ஈட்டும் நிறுவனத்தைத் தான் வங்கி என்கிறோம். எனவே ஒரு வங்கி என்றால் அவர்கள் மக்களிடம் டெபாசிட் பெறும் தகுதியுடையதாக இருக்க வேண்டும்.
முன்பே கூறியது போல பாரம்பரிய வங்கிகள் வங்கிக் கிளை, ஏடிஎம் எந்திரங்கள் என பல இடங்களில் தங்கள் வாடிக்கையாளர்களோடு நேரடியாக தொடர்பில் இருக்கும். ஆனால் NEO நிறுவனங்களால் முடியாது.
பாரம்பரிய வங்கிகள், தங்களது டெபாசிட் பணத்தை வைத்து கடன் கொடுத்து வியாபாரம் செய்கிறார்கள். NEO நிறுவனங்கள் ஃபண்டிங் மூலம் திரட்டும் பணத்தை வைத்து வியாபாரம் செய்கிந்றன. கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள NEO நிறுவனங்கள் 230 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீட்டாகத் திரட்டியுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைச் செய்தி ஒன்றில் வெளியாகியுள்ளது. பெருவியாபாரங்களில் LoC (Line of Credit), LoU (Letter of Undertaking) போன்ற சில வணிக ரீதியில் அத்தியாவசியமான சேவைகளை NEO நிறுவனங்களால் வழங்க முடியாது. அது பாரம்பரிய வங்கிகளின் மிகப்பெரிய பலம்.
பாரம்பரிய வங்கிகளுக்கு இந்த உரிமை உண்டு. ஆனால் NEO நிறுவனங்களுக்கு மக்களிடமிருந்து பணத்தை டெபாசிட்டாகப் பெற வேண்டுமானாலும் இந்தியாவில் உள்ள மற்ற ஏதாவது ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தோடு இணைந்துதான் டெபாசிட்டைப் பெற வேண்டி இருக்கும். அதே போல கடன் கொடுக்க வேண்டுமானாலும் வங்கியின் உதவி தேவை.
பாரம்பரிய வங்கிகளால் டிடி, காசோலை... போன்ற பாரம்பரிய வணிக ரீதியிலான பணப்பரிமாற்றங்களை வழங்க முடியும். கோடிக் கணக்கிலான ரூபாயை இன்று கூட காசோலையில் தான் பெருநிறுவனங்கள் செலுத்தி வருகின்றன. இது போன்ற சேவைகளை நியோ நிறுவனங்களால் இப்போதைக்கு வழங்க முடிவதில்லை.
ஒரு வங்கி வாடிக்கையாளருக்கு, ஒரு குறிப்பிட்ட வங்கிக்கு எதிராக சில விஷயங்களில் பிரச்னை ஏற்பட்டால், மத்திய ரிசர்வ் வங்கியிடம் சென்று முறையிட்டு ஒரு தீர்வைக் காணலாம். ஆனால் NEO நிறுவனங்களிடம் ஒரு பிரச்னை என்றால் யாரிடம் சென்று முறையிடுவது, அவர்கள் யாரால் நேரடியாகக் கண்காணிக்கப்படுகிறார்கள் என்கிற குழப்பம் இப்போதும் இந்திய சந்தையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
பாரம்பரிய வங்கிகள் கடந்த பல தசாப்த காலமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்றுள்ளனர். NEO நிறுவனங்கள் வியாபாரம் செய்து லாபமீட்டுவதைப் போலவே, மக்கள் மனதில் நம்பிக்கை பெறுவதும் மிக அவசியமாகிறது. ஆனால் நேரடியாக ஒரு நபரை சந்திக்காமல், அதை எப்படி NEO நிறுவனங்கள் சாத்தியப்படுத்தும் என்பது தான் அவர்கள் முன்னிருக்கும் பெரிய சவால்.