மின்னல் வேக டவுன்லோட்! டெலிகிராம் பிரீமியம் சந்தாவின் டாப் 5 தகவல்கள்
700 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட டெலிகிராம் செயலியில் தற்போது அனைத்து வசதிகளும் பயனர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வரும் நிலையில், சில மேம்படுத்தப்பட்ட சிறப்பு வசதிகளை பயன்படுத்துவதற்கு பயனர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க அந்நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக ப்ரீமியம் பிளான் என்ற புதிய சந்தா செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் சமீபத்தில் தெரிவித்தார்.
அடிப்படை டெலிகிராம் பிரீமியம் திட்டத்திற்கு மாதத்திற்கு $4.99 (இந்திய மதிப்பில் ரூ.390) செலவாகும் என்று TechCrunch நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் இந்த வசதி மிக விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது புதிய பிரீமியம் சந்தா சேவையில் கிடைக்க உள்ள புதிய வசதிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அவற்றுள் மிக முக்கிய டாப் 5 வசதிகள் இதோ!
1. தற்போது டெலிகிராமில் 2ஜிபி வரையிலான ஃபைல்களை மட்டுமே அனுப்ப இயலும் நிலையில், பிரீமியம் சந்தாவில் 4ஜிபி வரை ஃபைல்களை அனுப்ப இயலுமாம். மேலும் பிரீமியம் சந்தா பயனர்கள் அனுப்பும் 4ஜிபி ஃபைல்களை, சந்தா செலுத்தாத பயனர்கள் வழக்கம் போல தரவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. பிரீமியம் சந்தா பயனர்களுக்கு மின்னல் வேகத்தில் டவுன்லோட் செய்யும் வசதியும் வழங்கப்பட உள்ளது. பயனர்களது நெட்வொர்க் உச்சபட்சமாக எவ்வளவு வேகமாக டவுன்லோட் செய்ய முடியுமோ அவ்வளவு வேகமாக டவுன்லோட் செய்யும் வசதி வழங்கப்படுமாம்.
3. பொதுவாக டெலிகிராமில் 500 சேனல்களை பின் தொடர இயலும் நிலையில் பிரீமியம் பயனர்கள் 1,000 சேனல்களைப் பின்தொடர முடியும். அவர்களது Chat-களை 20 தனித்தனி Folder-களாக மாற்றி தங்களது வசதிக்கேற்ப பயன்படுத்தும் அம்சமும் இடம்பெற உள்ளது.
4. பொதுவாக டெலிகிராமில் 5 chat-களை “பின்” செய்ய இயலும் நிலையில் பிரீமியம் பயனர்கள் 10 அரட்டைகள் வரை பின் செய்ய முடியும்.
5. பிரீமியம் சந்தாதாரர்கள் நீண்ட பயோவை எழுதவும் அனிமேஷன் செய்யப்பட்ட சுயவிவர வீடியோக்களைப் பயன்படுத்த முடியும். ட்விட்டர் ப்ளூ டிக்கைப் போல பிரீமியம் பயனர்களின் பெயருக்கு அடுத்ததாக பிரீமியம் பேட்ஜ் ஒன்றும் இடம்பெறுமாம். கடைசியாக, டெலிகிராம் பிரீமியம் பயனர்கள் விளம்பரமில்லா அனுபவத்தையும் பெற இயலும்.