அதிசய பொருள் கண்டுபிடிப்பு - பேட்டரி இல்லாமல் இயங்கும் ஸ்மார்ட்வாட்ச்!
எந்தவொரு வெளிப்புற சக்தியும் இல்லாமல், அதாவது பேட்டரி இல்லாமல் பயனரின் உடல் நலத்தை தொடர்ந்து கண்காணிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த வேலையை செய்யும் ஸ்மார்ட்வாட்ச் தான் புதிய தொழில்நுட்பத்தை உட்கொண்டுள்ளது.
அதாவது ஆய்வாளர்கள் பேட்டரி இல்லாமல் இயங்கும் ஸ்மார்ட்வாட்சை கண்டுபிடித்துள்ளனர். சோதனை முயற்சியில் இருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் விரைவில் பயனர் சந்தைக்குக் கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தானியங்கியாக தன்னை சக்தியூட்டிக் கொள்ளும் இந்த ஸ்மார்ட்வாட்சை, இர்வினிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது. இது அருகில் இருக்கும் ஸ்மார்ட்போனை தொடர்பு கொண்டு உங்கள் உடல்நிலை தகவல்களை சேமிக்கிறது.
நானோ எனர்ஜி ஜெனரேட்டர்களை தூண்டும்போது, சென்சார், எல்இடி டிஸ்ப்ளேவுக்கு இந்த புதிய தொழில்நுட்பம் மின்சாரத்தை வழங்குகிறது. முக்கியமாக NFC தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனுக்கும், ஸ்மார்ட்வாட்சுக்கும் இடையே தரவு மற்றும் சக்தியை பரிமாறிக்கொள்ள உதவுகிறது.
உடல் வெப்பநிலை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்தையும் இந்த தொழில்நுட்பம் கண்காணிக்க உதவும் என நானோ எனர்ஜி என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட தொழில்நுட்பத்தை விவரிக்கும் ஒரு கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
"இந்த கண்டுபிடிப்பு பல குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்," என்று மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியலின் உதவி பேராசிரியர் Rahim Esfandyar-Pour தெரிவித்துள்ளார்.
இது தேவைக்கேற்ப சுகாதார கண்காணிப்பை, பேட்டரி இன்றி, வயர்லெஸ் முறையில் எந்த நேரத்திலும் எங்கும் செயல்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பமானது குறைந்த விலை மற்றும் நெகிழ்வான பொருள்களால் ஆனது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கும் ஆய்வுக்குழு, சோதனை முயற்சியில் நகர்ந்துவரும் இந்த தொழில்நுட்பம் பயனர் சந்தைக்கு விரைவில் வரும் எனவும் தெரிவித்துள்ளனர்.